பாகிஸ்தானுக்கு எதிராக மெல்பர்ன் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெற்ற பொக்சிங் டே டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 79 ஓட்டங்களால் வெற்றியீட்டிய அவுஸ்திரேலியா, 3 போட்டிகள் கொண்ட தொடரில் ஒரு போட்டி மீதமிருக்க 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் தொடரை தனதாக்கிக்கொண்டது.
பேர்த் விளையாட்டரங்கில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 360 ஓட்டங்களால் அவுஸ்திரேலியா வெற்றிபெற்றிருந்தது.
மெல்பர்னில் நடைபெற்ற 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அணித் தலைவர் பெட் கமின்ஸ் 2 இன்னிங்ஸ்களிலும் 5 விக்கெட் குவியல்களைப் பதிவு செய்ததுடன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஒன்றில் இரண்டாவது தடவையாக 10 விக்கெட் குவியலைப் பதிவு செய்து அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றி ஆட்டநாயகன் விருதை வென்றெடுத்தார்.
மானுஸ் லபுஷேன், ஸ்டீவன் ஸ்மித், மிச்செல் மார்ஷ், அலெக்ஸ் கேரி ஆகியோர் பெற்ற அரைச் சதங்கள், நேதன் லயன், மிச்செல் ஸ்டாக் ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சுகள் என்பனவும் அவுஸ்திரேலியாவின் வெற்றியில் பங்காற்றியிருந்தன.
போட்டியின் நான்காம் நாளான இன்று வெள்ளிக்கிழமை (29) இரண்டு அணிகளும் வெற்றி பெறுவதற்கான சம வாய்ப்பைக் கொண்டிருந்தன.
ஒரு கட்டத்தில் அவுஸ்திரேலியாவும் மற்றொரு கட்டத்தில் பாகிஸ்தானும் பலமான நிலையில் இருந்ததால் போட்டியில் எதுவும் நிகழலாம் என்ற நிலை ஏற்பட்டது.
317 ஓட்டங்கள் என்ற சுமாரான வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் ஒரு கட்டத்தில் 3 விக்கெட்களை இழந்து 146 ஓட்டங்களையும் மற்றொரு கட்டத்தில் 5 விக்கெட்களை இழந்து 219 ஓட்டங்களையும் பெற்று வெற்றிபெறக்கூடிய நிலையில் இருந்தது.
ஆனால், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டாக் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சில் பாகிஸ்தானின் கடைசி 5 விக்கெட்கள் 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்ந்ததுடன் கடைசி 3 துடுப்பாட்ட வீரர்கள் ஓட்டம் எதுவும் பெறாமல் ஆட்டம் இழந்தனர்.
இதன் பலனாக அவுஸ்திரேலியா அபார வெற்றியை ஈட்டி தொடரைக் கைப்பற்றியது.
ஷான் மசூத், பாபர் அஸாம் ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் 61 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு உற்சாகத்தைக் கொடுத்தனர்.
தொடர்ந்து மொஹமத் ரிஸ்வான், அகா சல்மான் ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 57 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கையை 219 ஓட்டங்களாக உயர்த்தி அவுஸ்திரேலியாவுக்கு அச்சத்தை ஏற்படுத்தினர்.
ஆனால், பெட் கமின்ஸ், மிச்செல் ஸ்டாக் ஆகிய இருவரும் கடைசி 5 விக்கெட்களை 18 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தானை தோல்வி அடையச் செய்தனர்.
போட்டியின் நான்காம் நாளான இன்று காலை தனது 2ஆவது இன்னிங்ஸை 6 விக்கெட் இழப்புக்கு 187 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா, மேலதிகமாக 75 ஓட்டங்களைப் பெற்று கடைசி 4 விக்கெட்களை இழந்தது.
நான்காம் நாளன்று நிதானத்துடன் துடுப்பெடுத்தாடிய அலெக்ஸ் கேரி பெற்ற அரைச் சதத்தின் உதவியுடன் பாகிஸ்தானுக்கு 317 ஓட்டங்களை வெற்றி இலக்காக அவுஸ்திரேலியா நிர்ணயித்தது.
போட்டியில் கிட்டத்தட்ட 2 தினங்கள் மீதம் இருந்தபோதிலும் பாகிஸ்தானினால் வெற்றி இலக்கை அடைய முடியாமல் போக அவுஸ்திரேலியா அபார வெற்றியீட்டியது.
எண்ணிக்கை சுருக்கம்
அவுஸ்திரேலியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 318 (மானுஸ் லபுஷேன் 63, உஸ்மான் கவாஜா 42, மிச்செல் மார்ஷ் 41, டேவிட் வோர்னர் 38, ஆமிர் ஜமால் 64 – 3 விக்., மிர் ஹம்ஸா 51 – 2 விக்., ஹசன் அலி 61 – 2 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 85 – 2 விக்.)
பாகிஸ்தான் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 264 (அப்துல்லா ஷபிக் 62, ஷான் மசூத் 54, மொஹமத் ரிஸ்வான் 42, ஆமிர் ஜமால் 33, பெட் கமின்ஸ் 48 – 5 விக்., நேதன் லயன் 73 – 4 விக்.)
அவுஸ்திரேலியா 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 262 (மிச்செல் மார்ஷ் 96, அலெக்ஸ் கேரி 53, ஸ்டீவன் ஸ்மித் 50, மிர் ஹம்ஸா 32 – 4 விக்., ஷஹீன் ஷா அப்றிடி 76 – 4 விக்., ஆமிர் ஜமால் 74 – 2 விக்.)
பாகிஸ்தான் (வெற்றி இலக்கு 317) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 237 (ஷான் மசூத் 60, அகா சல்மான் 50, பாபர் அஸாம் 41, மொஹமத் ரிஸ்வான் 35, பெட் கமின்ஸ் 49 – 5 விக்., மிச்செல் ஸ்டாக் 55 – 4 விக்.)