பாகிஸ்தான் மகளிர் அணிக்கு எதிரான மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்தியத்தீவுகள் மகளிர் அணித் தலைவி ஸ்டாஃபனி டெய்லர் ஹெட்ரிக் சாதனை புரிந்துள்ளார்.
மகளிர் கிரிக்கெட்டில் ஹெட்ரிக் சாதனை படைத்த இரண்டாவது மேற்கிந்தியத்தீவுகள் அணி வீராங்கனை என்ற பெருமையையும் ஸ்டாஃபனி டெய்லர் பெற்றார்.
மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் மகளிர் கிரிக்கெட் அணி, மே.இ.தீவுகள் மகளிர் கிரக்கெட் அணியுடன் மூன்று டி-20 மற்றும் 5 ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது.
முதலாவதாக நடைபெறும் டி-20 தொடரின் முதலிரு போட்டிகளிலும் மே.இ.தீவுகள் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியிருக்க மூன்றாவது ஆட்டம் நேற்று நோர்த் சவுண்டில் நடைபெற்றது.
போட்டியில் பாகிஸ்தான் துடுப்பெடுத்தாட, முதல் இன்னிங்சின் இறுதி ஓவரில் பாத்திமா சனா, டயானா பேக் மற்றும் அனம் அமீன் ஆகியோரை தொடர்ச்சியாக ஆட்டமிழக்க செய்தார் ஸ்டாஃபனி டெய்லர்.
மொத்தமாக 3.4 ஓவர்களுக்கு பந்துப் பரிமாற்றம் மேற்கொண்ட அவர் 17 ஓட்டங்களை வழங்கி 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
பந்து வீச்சு மாத்திரம் அல்லாது இந்த இன்னிங்சில் துடுப்பாட்டத்திலும் ஆதிக்கம் செலுத்திய அவர், 41 பந்துகளில் 4 பவுண்டரிகள் அடங்கலாக 43 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.
2018 ஆம் ஆண்டில் டி-20 கிரிக்கெட்டில் ஹாட்ரிக் எடுத்த முதல் மே.இ.தீவுகள் மகளிர் வீராங்கனை என்ற பெருமையை அனிசா மொஹமட் பெற்றார்.
இந்த ஆட்டத்திலும் அவர் தனது பங்கிற்கு 24 ஓட்டங்களை வழங்கி மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
தொடரின் மூன்றாவது டி-20 கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் 19.4 ஓவர்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 102 ஓட்டங்களை பெற, மே.இ.தீவுகள் 19.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 106 ஓட்டங்களை பெற்று வெற்றியை பதிவுசெய்து கிண்ணத்தையும் கைப்பற்றியது.
போட்டியின் ஆட்டநாயகனாக ஸ்டாஃபனி டெய்லர் தெரிவானார்.