பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் எல்லையையொட்டி அமைந்து உள்ளது. இங்குள்ள துறைமுக நகரான குவாதருக்கு உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்த குவாதர் துறைமுகத்துக்கு அருகே உள்ள 5 நட்சத்திர ஓட்டல் ஒன்றுக்கு நேற்று மாலை சுமார் 4.45 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் 3 பயங்கரவாதிகள் திடீரென வந்தனர். இவர்களை பார்த்து அதிர்ச்சியடைந்த ஓட்டல் காவலாளி, அந்த பயங்கரவாதிகளை தடுக்க முயன்றார்.
உடனே அந்த பயங்கரவாதிகள், அந்த காவலாளி மீது துப்பாக்கியால் சுட்டனர். இதில் அங்கேயே அவர் ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்து பலியானார். பின்னர் ஓட்டலுக்குள் நுழைந்த அந்த பயங்கரவாதிகள் அங்கு தங்கியிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்த முயன்றனர்.
இது குறித்து தகவல் அறிந்ததும் மாகாண போலீசார், பயங்கரவாத தடுப்பு பிரிவினர், ராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் அங்கு அதிரடியாக குவிக்கப்பட்டனர். அவர்கள் ஓட்டலுக்குள் நுழைந்த பயங்கரவாதிகளை வேட்டையாடும் பணிகளை தொடங்கினர். இதனால் இரு தரப்புக்கும் இடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்தது.
இதில் 3 பயங்கரவாதிகளும் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதற்கிடையே ஓட்டலில் தங்கியிருந்த வெளிநாடு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பத்திரமாக அங்கிருந்து வெளியேற்றப்பட்டனர். எனினும், அதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இந்த தாக்குதல் சம்பவத்தால் குவாதர் நகர் முழுவதும் பெரும் பரபரப்பு நிலவியது.
இந்த பயங்கரவாத சம்பவத்துக்கு இதுவரை எந்த இயக்கமும் பொறுப்பேற்கவில்லை. இந்த தாக்குதலுக்கு மாகாண முதல்-மந்திரி ஜம் கமால் கான் அல்யானி கடும் கண்டனம் தெரிவித்து உள்ளார்.