பஹாமாஸில் நடைபெற்ற NACAC நியூ லைவ் அழைப்பு மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் இலங்கை ஓட்ட வீரர் அருண தர்ஷன இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
இப் போட்டி உலக மெய்வல்லநர் கண்டங்கள் சுற்றுப் பயண வெள்ளி முத்திரை போட்டி அந்தஸ்தைக் கொண்டதாகும்.
400 மீறறர் ஓட்டப் போட்டியை 45.88 செக்கன்களில் நிறைவுசெய்து அருண தர்ஷன இரண்டாம் இடத்தைப் பெற்றார்.
அமெரிக்காவில் வாழ்ந்துவரும் ஜப்பான் வீரர் யூக்கி ஜோசப் நக்காஜிமா (45.49 செக்.) வெற்றிபெற்றார்.
அப் போட்டியில் வெற்றிபெறக்கூடியவர் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நைஜீரிய வீரர் இம்மானுவேல் பமிடெல் (45.90 செக்.) மூன்றாம் இடத்தைப் பெற்றார்.
பஹாமாஸ}க்கு செல்லும் முன்னர் 400 மீற்றர் ஓட்டப் போட்டியை இம்மானுவேல் 45.00 செக்கன்களில் நிறைவுசெய்திருந்தார். ஆனால் பஹாமாஸில் இம்மானுவேலினால் திறமையை வெளிப்படுத்த முடியாமல் போனது.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டத்திற்கான ‘ஒலிம்பிக்கை நோக்கிய பயண’ சர்வதேச தரவரிசையில் காலிங்க குமாரகே 53ஆவது இடத்திலும் அருண தர்ஷன 54ஆவது இடத்திலும் இருக்கின்றனர்.
அவர்கள் இருவரும் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதாக இருந்தால் தரவரிசையில் 48 இடங்களுக்குள் வரவேண்டும் அல்லது 400 மீற்றர் ஓட்டப் போட்டியை 45.00 செக்கன்களுக்குள் ஓடி முடிக்க வேண்டும்.
ஸ்பெய்னில் இன்று நடைபெறவுள்ள மெய்வல்லுநர் போட்டியில் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியில் காலிங்க குமாரகே பங்குபற்றவுள்ளார்.
காலிங்க குமாரகே, அருண தர்ஷன ஆகிய இருவருக்கும் இன்னும் இரண்டு மெய்வல்லநர் போட்டிகள் இலங்கையில் நடைபெறவுள்ளது.
தேசிய மெய்வல்லநர் சம்பியன்ஷிப் போட்டிகள் தியகமவில் (ஜூன் 25 – 27) நடைபெறவுள்ளளதுடன் தேசிய பகிரங்க இரண்டாம் கட்ட மெய்வல்லுநர் போட்டி ஜூன் 30ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இந்த இரண்டு போட்டிகளிலும் அவர்கள் வெற்றிபெற்றால் ஒலிம்பிக் அடைவு மட்டத்தை எட்ட வாய்ப்பு உள்ளது. ஒலிம்பிக் தகுதியைப் பெறுவதற்கான கடைசி திகதி ஜூன் 30ஆம் திகதியாகும்.
இதேவேளை, ஸ்பெய்னில் இன்று நடைபெறவுள்ள பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் தருஷி கருணாரட்ன பங்குபற்றவுள்ளார். அவர் இப் போட்டியை 2 நி. 10 செக்கன்களுக்குள் நிறைவு செய்தால் ஒலிம்பிக் தகுதியைப் பெறுவார்.