கதைக்களம்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல், விஜய் சேதுபதி, பகத் பாசில் நடிப்பில் வெளியாகி இருக்கும் விக்ரம் படத்தின் விமர்சனம்.விமர்சனம்
பழிக்கு பழி – விக்ரம் விமர்சனம்
காவல் துறையில் இருப்பவர்களை மாஸ்க் அணிந்த மர்ம கும்பல் கொலை செய்கிறது. இதில் காளிதாஸ் ஜெயராமும் கொல்லப்படுகிறார். அதுபோல் காவல் துறையில் சம்பந்தம் இல்லாமல் இருக்கும், காளிதாசனின் வளர்ப்பு அப்பா கமலும் கொல்லப்படுகிறார். மாஸ்க் மனிதர்களை கண்டுபிடிக்க, சீக்ரெட் ஏஜென்சிஸ் ஆக இருக்கும் பகத் பாசிலிடம் ஒப்படைக்கப்படுகிறது.
மாஸ்க் மனிதர்கள் பற்றிய விவரங்களை சேகரிக்கும் பகத் பாசிலுக்கு பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கிறது. இறுதியில் பகத் பாசில், மாஸ்க் மனிதர்களை கண்டுபிடித்தாரா? கமலை மாஸ்க் மனிதர்கள் கொலை செய்ய காரணம் என்ன? மாஸ்க் மனிதர்கள் காவல் துறையினரை கொல்ல காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் கமல், முதல் பாதியில் கர்ணனாகவும், இரண்டாம் பாதியில் விக்ரமாகவும் நடித்திருக்கிறார். குடிகாரன், மகனை நினைத்து கவலைப்படும் பாசமான தந்தை. பேரனை நினைத்து ஏங்கும் தாத்தா என நடிப்பில் பளிச்சிடுகிறார். அதுபோல், நடனம், ஆக்ஷன், என ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார்.
கமலுக்கு அடுத்தபடியாக பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார் பகத் பாசில். முதல் பாதி முழுவதும் திரைக்கதையை தன் வசப்படுத்தி இருக்கிறார். சின்ன சின்ன அசைவுகளில் கூட ரசிக்க வைத்திருக்கிறார் விஜய் சேதுபதி. அலட்டல் இல்லாத இவரது நடிப்பு படத்திற்கு பெரிய பலம். காயத்ரி, மைனா, சிவானி, மகேஷ்வரி ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தனக்கே உரிய பாணியில் நடித்து ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார் நரேன். சூர்யாவின் மாஸ் சீன் தியேட்டரில் விசில் பறக்கிறது.

போதை பொருளை மையமாக வைத்து ஆக்ஷன், சென்டிமென்ட், பழிக்கு பழி என திரைக்கதை அமைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குனர்.
அனிருத் இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். பின்னணி இசையில் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார். கிரீஸ் கங்காதரனின் ஒளிப்பதிவு சிறப்பு.
மொத்தத்தில் ‘விக்ரம்’ வின்னர்.