நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனி முருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அப்போது முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக வழிபாட்டு தலங்கள் அனைத்தும் சுமார் 2 மாதங்களாக மூடப்பட்டன. தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்து வருவதையொட்டி ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளன. அதன்படி கடந்த வாரம் முதல் வழிபாட்டு தலங்கள் மீண்டும் திறக்கப்பட்டன. இதையடுத்து கோவில்களில் கொரோனா கட்டுப்பாடுகளை பின்பற்றி பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
உலக புகழ்பெற்ற பழனிமுருகன் கோவிலில் கடந்த 5-ந்தேதி முதல் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் கோவில் நிர்வாகம் அறிவித்துள்ள வழிகாட்டுதல் படி, முன்பதிவு செய்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். மேலும் கோவிலில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஒரு மணி நேரத்துக்கு 1,000 பக்தர்கள் மட்டுமே தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகின்றனர். பக்தர்கள் நலன் கருதி தரிசனத்துக்கு பாதை மாற்றப்பட்டுள்ளது. அதன்படி குடமுழுக்கு நினைவரங்கம் வழியாக கோவிலுக்கு செல்லவும், படிப்பாதை வழியாக இறங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுதவிர 1-வது மின் இழுவை ரெயில் மூலமும் பக்தர்கள் தரிசனத்திற்காக மலைக்கோவிலுக்கு சென்று வருகின்றனர். ஆனால் ரோப்கார் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. எனவே ரோப்கார் சேவையை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில் நேற்று வார விடுமுறையையொட்டி அதிகாலை முதலே ஏராளமான பக்தர்கள் பழனிமுருகன் கோவிலுக்கு வருகை தந்தனர். அப்போது முன்பதிவு செய்திருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். அதன்படி, தரிசனத்துக்காக நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். பக்தர்கள் அதிக அளவில் குவிந்ததால் பழனி முருகன் கோவில் பகுதி மீண்டும் திருவிழா கோலம் பூண்டது. குறிப்பாக நேற்று பழனி மலை அடிவாரம், சன்னதி வீதி, கிரி வீதி பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
இதற்கிடையே சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் தங்களது வாகனங்களை கிழக்கு கிரிவீதி, மேற்கு கிரிவீதி அருகே உள்ள சுற்றுலா பஸ் நிலையங்களில் நிறுத்தினர். இதனால் அந்த பஸ் நிலையங்கள் சுற்றுலா வாகனங்களால் நிரம்பி காணப்பட்டது. மேலும் வாகனங்களின் வருகை அதிகம் இருந்ததால் பூங்கா ரோடு, அடிவாரம் ரோடு, பஸ்நிலைய பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை போக்குவரத்து போலீசார் ஒழுங்குப்படுத்தினர். இதேபோல் பழனி மலைக்கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்ததால் ஆங்காங்கே பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர்.
http://Facebook page / easy 24 news