திருகோணமலை நகரத்தை அண்மித்த பள்ளிவாசல் ஒன்றில் இடம்பெற்ற தீவைப்புச் சம்பவம் தொடர்பில் தமிழ் இளைஞர் ஒருவரை பொலிசார் இன்று கைது செய்துள்ளனர்.
திருகோணமலை துறைமுகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பெரிய கடை ஜூம்மா பள்ளிவாசல் மீது கடந்த மூன்றாம் திகதி அதிகாலை இனந்தெரியாத விஷமிகளால் தீ வைக்கப்பட்டிருந்தது.
நள்ளிரவு 11.00 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 3.00 மணிக்குள் நடைபெற்றிருந்த குறித்த தீவைப்புச் சம்பவத்தில் பள்ளிவாசலின் தரைவிரிப்புகள் தீயினால் கருகிப்போயிருந்தது.
அத்துடன் பள்ளிவாயிலின் உள்ளே வீசியெறியப்பட்ட நிலையில் ஒரு மதுபான போத்தலும் அதற்குள் எரிபொருளும் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த பொலிசார் இன்று சதீஷ்குமார் எனும் 22 வயதுடைய இளைஞர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
இவர் அண்மைக்காலமாக பொதுபல சேனாவின் நட்பு அமைப்பான ஹிந்து சம்மேளனத்துடன் இணைந்து இயங்கி வந்திருப்பது குறித்த தகவல்கள் வெளியாகியிருப்பதாகவும் ஊடகங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன