கண்டி – அக்குறணை பகுதியிலுள்ள பள்ளிவாசலொன்றின் மீது குண்டுத் தாக்குதல் நடத்தப்படக்கூடுமென அவசர தொலைபேசியூடாக போலித் தகவல் வழங்கியதாக கூறப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கண்டி ஹாரிஸ்பத்துவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் ஒருவரே இவ்வாறு சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, இவ்வாறு அவசர தொலைபேசி இலக்கங்களுக்கு போலியான அல்லது ஏமாற்றும் விதத்தில் அழைப்புகளை மேற்கொள்வதை தவிர்க்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ள பொலிஸார், இவ்வாறான நிலைமை தேவையற்ற பீதியை ஏற்படுத்துவதுடன் மிக முக்கியமான அவசரநிலைமைகளில் கவனம் செலுத்துவதில் இருந்து அதிகாரிகளை திசைதிருப்பக்கூடுமெனவும் தெரிவித்துள்ளனர்.