சர்வதேச ரீதியான பளுதூக்கல் போட்டி வரலாற்றில் இலங்கைக்கு முதல் பதக்கம் வென்று கொடுத்த சின்த்தன கீதால் வித்தானகே உஸ்பெகிஸ்தானின் டஷ்க்கென்ட் நகரில் நடைபெற்று வரும் உலக பளுதூக்கல் போட்டித் தொடர் மற்றும் பொதுநலவாய பளுதூக்கல் போட்டியின் ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்று அசத்தினார்.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பிற்போட்டு வரப்பட்டு வந்த உலக பளுதூக்கல் போட்டி மற்றும் பொதுநலவாய பளுதூக்கல் போட்டி என்பவற்றை ஒன்றாக நடத்த சர்வதேச பளுதூக்கல் சம்மேளத்தினால் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இதன்படி கடந்த 7 ஆம் திகதியன்று உஸ்பெகிஸ்தானில் இந்த இரண்டு போட்டிகளும் ஒரே தடவையில் ஆரம்பிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றது.
இப்போட்டித் தொடரின் ஆறாவது தினத்தில் (12) இலங்கையின் சின்த்தன கீதால் விதானகே பொதுநலவாய பளுதூக்கல் போட்டியின் ஆண்களுக்கான 81 கிலோ கிராம் எடைக்குட்பட்ட பிரிவில் போட்டியிட்டிருந்தார்.
இதில் ஸ்னெட்ச் முறையில் 134 கிலோ கிராம் எடையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 166 கிலோ கிராம் எடையும் என மொத்தமாக 300 கிலோ கிராம் எடையை தூக்கி வெண்லப் பதக்கம் வென்றார்.
2006 பொதுநலவாய விளையாட்டு விழாவில் தங்கப் பதக்கமும், 2010 பொதுநலவாய விளையாட்டு விழாவில் வெள்ளிப் பதக்கமும் வென்று இலங்கைக்கு பெருமை தேடிக்கொடுத்த சின்த்தன, தற்போது வெண்கலப் பதக்கம் வென்று கொடுத்து, அவரின் திறமை இன்னும் மங்கிவிடவில்லை என்பதை நிரூபித்துக் காட்டினார்.
சின்த்தன கீதால் வித்தானகேவின் வெண்கலப் பதக்கத்தோடு இலங்கையின் பதக்க எண்ணிக்கை ஆறாக உயர்வடைந்தது. இதில் இலங்கை ஒரு தங்கம் , 5 வெண்கலப் பதக்கங்கள் அடங்குகின்றன.
பொதுநலவாய பளுதூக்கல் போட்டித் தொடரில் இலங்கைக்கான தங்கப் பதக்கத்தை ஸ்ரீமாலி சமரக்கோன் பெற்றுக்கொடுத்தார். இவர் ஸ்னெட்ச் முறையில், 58 கிலோ கிராம் எடையும் க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 78 கிலோ கிராம் எடையும் என மொத்தமாக 136 கிலோ கிராம் எடையை தூக்கி இந்த தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.
இவரைத் தவிர, திலன்க விராஜ் பலங்கசிங்க, நதீஷானி ராஜபக்ஷ பெண்களுக்கான, இந்திக்க திசாநாயக்க, மனோஜ் விஜேசிங்க ஆகியோரும் தத்தம் போட்டி பிரிவுகளில் வெண்கலப் பதக்கம் வென்று இலங்கைக்கு பெருமை சேர்த்திருந்தமை குறிப்பிடத்தக்கது
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]