பற்களின் முக்கியத்தும்
பல் வரிசை அழகுக்கு மட்டுமல்ல, ஆரோக்கியத்துக்கும் முக்கியம் வாய்ந்தது. ‘பல் போனால் சொல் போச்சு’ என்ற பழமொழி பற்களின் முக்கியத்துவத்தை காட்டுகிறது. பற்களை பற்றிய பளிச் பழமொழிகள் ஏராளம். பற்கள் பாதிக்கப்பட்டால் பல்வேறு நோய்களும் எட்டிப்பார்க்கும். பற்கள்தான் ஒருவரின் ஆரோக்கியத்தை நிர்ணயிக்கின்றன.
பற்களை ஆரோக்கியமாக பாதுகாத்தால் நோய்களை தவிர்க்கலாம். பாதிப்பும், தீர்வும் ஈறுகள்தான் பற்களை பாதுகாக்கும் அமைப்பு. பல் நேரடியாக தாடை எலும்புடன் இணையவில்லை. நார் போன்ற அமைப்புகளே பல்லையும் எலும்பையும் இணைக்கிறது. இந்த எலும்பை போர்வை போன்று மூடி பாதுகாப்பது ஈறு. பற்களை பாதுகாக்க ஒரு வகையான திரவம் சுரக்கிறது. பற்களில் உணவு துகள்கள், கரை படியும்போது ஈறு பாதிக்கப்பட்டு, பல்லையும் எலும்பையும் இணைக்கும் தொடர்புகள் துண்டிக்கப்படுகின்றன. உணவு துகள்கள் அதிகளவில் அதில் தங்கிவிடும். இதை வெளியேற்ற உடலில் உள்ள நோய் எதிர்ப்பு அமைப்புகள் போராடும். இதில் உடல் பாதுகாப்பு அமைப்பு தோல்வியுறும்போது கிருமி வேகமாக வளர்ந்து எலும்பை அரிக்கத்தொடங்கும். இதை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து சிகிச்சை பெற வேண்டும்.
ஈறுகளில் வீக்கம் ஏற்படும்போது அதை சரி செய்ய நம் உடலில் சில ஹார்மோன்கள் சுரக்கும். கர்ப்பிணிகளுக்கு முன்கூட்டியே குழந்தை பிறப்பதற்கு, இந்த ஹார்மோனும் காரணமாகிவிடுகிறது. மேலும் இந்த ஹார்மோனால் இதயநோயும் உருவாகலாம். எனவே கர்ப்பிணிகள் பல் ஈறுகளில் ரத்தக்கசிவு இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகி சிகிச்சை பெறவேண்டும்.வாய் துர்நாற்றம் வாய் துர்நாற்றம் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. உணவுத்துகள்கள் பல் இடுக்குகளில் மாட்டிக்கொண்டு வாய் கொப்பளிக்கும் போதோ அல்லது பல் துலக்கும்போதோ வெளியேறவில்லை என்றால் அழுகிப்போய் கெட்ட வாடை வீசலாம். தொண்டையில் நோய் தொற்று ஏற்பட்டு துர்நாற்றம் வீசலாம்.ஈறு நோய், சொத்தைப்பல், வயிறு தொடர்பான பிரச்னைகளால் துர்நாற்றம் ஏற்படலாம். மவுத் வாஷ் கொண்டு வாய் கொப்பளிப்பது என்பது தற்காலிகமான தீர்வுதான். பற்களின் எனாமலை அடுத்துள்ள டென்டைன் என்ற பகுதியில் குளிர்ந்த அல்லது சூடான பானங்கள் நேரடியாக படும்போது பற்கூச்சம் ஏற்படும்.
பராமரிப்பு
பற்கூச்சம் போன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு சாஃப்ட் வகை டூத் பிரஷ்களையும், மற்றவர்கள் மீடியம் வகை பிரஷ்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும். பிரஷின் தலைப்பகுதி சிறியதாக இருந்தால் மட்டுமே பல் வரிசையின் எல்லாப் பகுதிகளுக்கும் சென்று சுத்தம் செய்ய வசதியாக இருக்கும்.90 நாட்களுக்கு ஒருமுறை பிரஷை மாற்றுவது நல்லது. பல் துலக்கும்போது பிரஷை இட, வலமாக பற்களின் மேல் அழுத்தித்தேய்ப்பார்கள். இப்படி செய்வதால் பற்களின் மேல் இருக்கும் கிருமிகள், உணவுத்துகள்கள் பல் இடுக்கில் தங்கிவிடும். இதனால் பற்கள் தேயவும் வாய்ப்பு உள்ளது. டூத் ப்ரெஷ்ஷை சிறிதுசாய்த்து மெதுவாக ஒவ்வொரு பல்லிலும் ஈரும், பல்லும் சந்திக்கும் இடத்தில் இருந்து துலக்க வேண்டும். இதேபோன்று ஒவ்வொரு பல்லும் துலக்க 2 முதல் 3 நொடிகள் போதுமானது. இதனால் ஈறுகளில் ஒளிந்திருக்கும் உணவுத் துகள்கள், கிருமிகள் வெளியேறும். கரும்பு, அன்னாசிப்பழம் போன்றவை பற்களை சுத்தம் செய்யும் தன்மை கொண்டது. அதிக அளவில் நார்ச்சத்து உள்ள காய்கறிகள் சாப்பிடுவது பற்களுக்கு ஆரோக்கியமானது.
இயற்கையான நல்லெண்ணெயில் வாய் கொப்பளிக்கவேண்டும். 15 முதல் 20 நிமிடங்கள் கொப்பளித்த பிறகு தண்ணீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். இதற்கு பிறகு பிரஷ் செய்வதும், வாயை சுத்தம் செய்வதும் அவசியம். இதனால் பல் வலி, பற்கள் விழுதல், வாயில் நோய்த்தொற்று, ஈறுகளில் ரத்தக்கசிவு போன்ற பிரச்னைகள் நீங்கும்.செயற்கை பல் : ஒரு பல் எடுத்தால், அதன் அருகில் உள்ள மற்ற பற்கள் அந்த இடத்தை நோக்கி நகர ஆரம்பிக்கும். மேல் பகுதியில் உள்ள பல் பயனற்றது போலத்தான். அதுவும் பல் இல்லாத இடம் நோக்கி நகர ஆரம்பிக்கும். இதை தவிர்க்க, அந்த இடத்தில் பொய் பல் கட்ட வேண்டியது அவசியம்.
பாதுகாப்பு
பற்களுக்கு நன்மை தரும் உணவுகளான ஸ்ட்ராபெர்ரி, சிட்ரஸ் பழங்கள், கேரட் போன்றவற்றை சாப்பிட்டால், பற்கள் வெண்மையுடன் இருக்கும். மேலும் ஒரு சில வீட்டு பொருட்களை பயன்படுத்தி, பற்களை துலக்கினாலும், பற்களை நன்கு ஆரோக்கியமாகவும், பளிச்சென்று வெண்மையுடனும் இருக்கும். சரி, இப்போது அத்தகைய பொருட்கள் என்னவென்று பார்க்கலாம்.
எலுமிச்சை துண்டை உப்பில் போட்டு பற்களை தேய்த்தால் வெண்மையாக இருக்கும்.
பற்களை வெள்ளையாக்கும் பாரம்பரிய வீட்டு வைத்தியப்பொருட்களில் கடுகு எண்ணெயும் ஒன்று. அதற்கு கடுகு எண்ணெய் மற்றும் மஞ்சள்தூள் கலந்து பேஸ்ட் போல் செய்து துலக்கவேண்டும்.
பேக்கிங் சோடாவை உப்புடன் சேர்த்து பற்களை துலக்கினால், பற்கள் வெண்மையோடு ஜொலிக்கும்.
ஆரஞ்சு பழத்தின் தோல் அல்லது அதன் கூழை வைத்து பற்களை தேய்த்தால், பற்கள் மின்னுவதோடு, வாய் துர்நாற்றமின்றியும் இருக்கும்.
ஈறுகளில் வலி அல்லது சொத்தை பற்கள் இருப்பவர்கள் தினமும் பற்களை துலக்கும்போது, பிரஷில் சிறிது கிராம்பு எண்ணெய் ஊற்றி, பின் பேஸ்ட் சேர்த்து தேய்க்கவும்.
பிரியாணி இலையை பொடி செய்து, அதனை எலுமிச்சை சாற்றில் கலந்து பற்களை துலக்க வெள்ளையாகும்.
செய்யக்கூடியவை
சாப்பிட்டதும், ஒரு மணி நேரம் கழித்து பல் துலக்கி வாய் கொப்பளிக்க வேண்டும்
தூங்க செல்வதற்கு முன்பு பல் துலக்கவேண்டும்
புகைத்தல், மது அருந்துதல் கூடாது.
போதுமான அளவுக்கு தண்ணீர் அருந்துங்கள்.
உணவு சாப்பிடும் நேரத்தில் மட்டும் இனிப்பு சாப்பிடவேண்டும்.
ஜூஸ் குடிப்பதற்கு பதிலாக பழங்களை கடித்து சாப்பிடலாம்.
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது உணவில் பால் பொருட்களை சேர்த்துக்கொள்ள வேண்டும்.
செய்யக் கூடாதவை
கோபமாக இருக்கும் போது பல்லை கடிக்கக்கூடாது.
பாட்டில் மூடி போன்ற கடினமான பொருட்களை பல்லால் கடித்து திறக்க முயற்சிக்க கூடாது. இதனால் பற்களுக்கு சேதம் ஏற்படுவதுடன் உதடுகளிலும் கீறல் அல்லது காயம் ஏற்படலாம்.