கோடிக்கணக்கான ரசிகர்களின் இதய நாயகன் புரட்சிக் கலைஞர், கலைமாமணி, கெப்டன் விஜயகாந்த் இன்று (28.12.2023) மண்ணுலகிலிருந்து விடை பெற்றார்.
இந்திய தமிழ் சினிமா வரலாற்றில் ரசிகர்களின் ஏகோபித்த அபிமான ஜனரஞ்சக நடிகரும், தே.மு.தி.கவின் தலைவருமான கப்டன் விஜயகாந்த் சென்னை தனியார் மருத்துவமனையில் தனது 71ஆம் அகவையில் காலமானார் …..!
ஒவ்வொரு கலைஞுனும் தன் வாழ்நாளில் ஏதோவொரு அடையாளத்தை தான் பிறந்த மண்ணிற்கு இட்டுச் செல்கின்றான். அவ்வாறு இந்திய சினிமா உலகில் போற்றப்பட கலைஞர்களில் கலைவாணர் என். எஸ் .கிருஷ்ணன்,மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்.நடிகர் திலகம் சிவாஜி கணேசன்செல்வி ஜெயலலிதா ஆகியோரை குறிப்பிட்டுச் சொல்லலாம்.
அந்த வரிசையில் “கெப்டன் விஜயகாந்தை” அவசியம் இணைத்துக் கொள்ள வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம். மேற்கண்ட கலைஞர்கள் வெறும் பணத்திற்காகவும் புகழுக்காகவும் தங்களை வளர்த்துக் கொள்ளாமல் மக்களிடையே நல்ல பல சமூகப்பணிகளை தன்னலம் கருதாமல் வழங்கியுள்ளனர்.அந்த அடிப்படையில் மக்கள் திலகம் எம்ஜியாருக்குப் பின் தமிழகத்தில் பேசப்பட்ட ஒரு நடிகர் “விஜயகாந்த் “என்றால் அது மிகையாகாது.
“கறுப்பு எம்ஜியார்”,”கறுப்புத்தங்கம்”,புரட்சிக் கலைஞர்” ,”கெப்டன்” என மக்களால் புகழாரம் சூட்டப்பட்டு பல ரசிகர்களை ஈர்த்ததவர் விஜயகாந்த்.தன் சொந்த வாழ்வில் பல துயர் நிறைந்த கட்டங்களை அனுபவித்து எவ்வித பக்கபலமின்றி தன்னம்பிக்கையை மட்டுமே மனதில் இருத்தி படிப்படியாக தமிழ் சினிமாவில் உயர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்த நடிகர்களில் விஜயகாந்த் குறிப்பிடத்தக்க ஜனரஞ்சக கலைஞராவார்….!
இவரின் உண்மையான பெயர் நாராயணசாமி பின் விஜயராஜ் என அழைக்கப்பட்டார். சினிமாவிற்காக விஜயகாந்த் என மாற்றிக்கொண்டார்.
விஜயகாந்த் மதுரை மாவட்ட திருமங்கலத்தில் கே.என்.அழகர்சாமி நாயுடு ,ஆண்டாள் அம்மையார் இணையருக்கு 1952.ஒகஸ்ட் 25 இல் பிறந்தார். இவரின் தந்தை அழகர்சாமி தன் தந்தை நாராயணசாமி நினைவாக “நாராயணசாமி “என்ற பெயரையே முதலில் இட்டார்.பின்னர் விஜயராஜ் என அழைக்கப்பட்டார். சிறுவயதிலேயே அவரது குடும்பம் மதுரைக்கு இடம் பெயர்ந்தது.
இவர்கள் தெலுங்கை தாய் மொழியாகக் கொண்டவர்கள் என்பது பலருக்குத் தெரியாத உண்மையாகும். விஜயகாந்துடன் மொத்தமாக நான்கு பிள்ளைகள்.விஜயகாந்தின் தங்கை ஒருவர் பிறந்த அதே நாளில் விஜயகாந்தின் தாயார் ஆண்டாள் காலமானார். பின்னர் ஒரு வருடம் கழித்து அழகர்சாமி ருக்மணி என்பவரை மணந்து ஏழு பிள்ளைகளுக்கு தந்தையானார்.ஆக விஜயகாந்த் குடும்பத்தில் மொத்தமாக பதினொரு பேர். சிறுபராயத்திலேயே சினிமா மீது தனது ஆர்வத்தை வளர்த்துக் கொண்டதால் படிப்பில் ஆர்வம் காட்டவில்லை.
தேவகோட்டை பிரிட்டோ உயர்நிலைப் பள்ளியிலும்,மதுரை நாடார் உயர்நிலைப் பள்ளியிலும் கல்வி பயின்று பத்தாம் வகுப்புடன் படிப்புக்கு மங்களம் பாடினார் விஜயகாந்த்.தன் தந்தையின் மேற்பார்வையில் இயங்கிய அரிசி ஆலையில் விஜயகாந்த் தனது பதின்ம வயதில் சிறு சிறு வேளைகளைச் செய்துவந்தார்.இளவயதிலே அரிசி ஆலையை மிகச் சிறந்த முறையில் நிர்வாகம் செய்தார்.
மதுரையில் “சைனா பிஃல்ம்ஸ்” மர்சூக் என்ற நண்பரின் அலுவலகத்தில் நணபர்களுடன் பொழுதுகளை போக்கினார் விஜயகாந்த். ஊர் வம்புகளை முன்னின்று வாங்கி பல பஞ்சாயத்துக்களிலும் ஈடுபட்டார்.தனது 13வது வயதில் மதுரையில் 1965 இல் நடந்த ஹிந்தி எதிர்ப்புப் போராட்டங்களில் கலந்து முழக்கமிட்டார்.
தாயார் ஆண்டாள்மறைவுக்குப் பின் அக்கா விஜயலட்சுமியின் கண்காணிப்பில் வளர்ந்தார்.விஜயலட்சுமி ஓர் மருத்துவர்.அக்கா சொல்லுக்கு என்றும் மதிப்பளிப்பவர் விஜயகாந்த்.மக்கள் திலகம் எம்ஜியார்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் போன்ற தமிழ் திரை ஜாம்பவான்களின் படங்களைப் பார்த்து தானும் தமிழ் சினிமாவில் ஓர் பெரிய நடிகராக உயர வேண்டும் என்பதே இவரது லட்சியமாக இருந்தது.
மக்கள் திலகம் எம்ஜியாரின் நடிப்பாலும் கொள்கைகளாலும் ஈர்க்கப்பட்டு அவரின் தீவிர ரசிகராக மாறினார்.மக்கள் திலகத்தை தன் மானசீக குருவாக மனதில் இருத்திக் கொண்டார் விஜயகாந்த். எம்ஜியார் நடித்த “எங்க வீட்டுப் பிள்ளை “படத்தை 70 தடவைகளுக்கு மேல் மதுரை சென்ட்ரல் திரையரங்கில் பார்த்தார்.
பின் நண்பர்களிடையே ஒவ்வொரு காட்சிகளாக நடித்து காட்டுவார். நண்பர்களின் தூண்டுதல்களாலும் ஆர்வம் காரணமாகவும் இவரது இலக்கு சதா சினிமாவிலேயே இருந்தது.இந்த உத்வேகத்தால் சென்னைக்கு விஜயம் மேற்கொண்டு எழும்பூரில் ஓர் அறையை வாடகைக்கு பெற்றுக் கொண்டு ஒவ்வொரு சினிமாக் கம்பனிகளிலும் வாய்ப்புக்காக சில ஆண்டுகள் அலைந்தார்.
தொடர் முயற்சிக்குப் நண்பர் “சைனா பிஃல்ம்ஸ்”மர்சூக் வாயிலாக 1978 இல் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. மேக்கப் சோதனையில் இவர் கறுப்பாக இருப்பதாகவும் தமிழ் உச்சரிப்பு சரியாக வரவில்லை என்ற காரணங்களாலும் நிராகரிக்கப்பட்டார்.அது விஜயகாந்த்துக்கு முதல் ஏமாற்றமாக இருந்தது.
இந்நிலையில் விஜயகாந்த் மர்சூக் மூலம் இயக்குனர் எம்.ஏ.காஜாவுடன் அறிமுகமாகி “இனிக்கும் இளமை”படத்தில் வில்லனாக அறிமுகமாகி நடிக்கும் வாய்ப்பைப் பெற்றார்.இவர் நடித்த முதல் படம் “இனிக்கும் இளமை”.அப்போது தமிழ் சினிமாவில் ரஜினிகாந்த்திற்கு நல்ல ஏற்றம் நிறைந்த காலகட்டம்.எனவே விஜயராஜ் என்ற பெயரில் இருந்த ராஜை எடுத்து விட்டு ரஜினிகாந்த்தில் இருந்த”காந்தை”சேர்த்து “விஜயகாந்த்”என மாற்றினார் இயக்குனர் எம்.ஏ.காஜா.பின்னர் அகல் விளக்கு,சாமந்திப்பூ,நீரோட்டம் போன்ற படங்களில் நடித்தார்.
இம்மூன்று படங்களும் தோல்வியைத் தழுவியது. இருப்பினும் முயற்சியை கைவிடாமல் 1980 இல் கே.விஜயன் இயக்கத்தில் இவர் நடித்த “தூரத்து இடிமுழக்கம்”அமோக வெற்றி பெற்றது. இப்படத்தில் “பொன்னன்” என்ற மீனவனாக நடித்து அனைவரினதும் பாராட்டுகளை பெற்றார்.இதன் பின் எஸ்.ஏ.சந்திரசேகரன் இயக்கத்தில் இவர் நடித்த “சட்டம் ஒரு இருட்டறை”விஜயகாந்தை இரே இரவில் தமிழ் சினிமாவின் உச்சத்தில் நிறுத்தியது. இவர் நடித்த “அலையோசை”
படத்தில் இடம் பெற்ற “போராடடா”என்ற பாடல் சாதி எதிர்ப்பு பாடலாக இன்றளவிலும் ஜனரஞ்சகமாக அமைந்தது. சுட்டெரிக்கும் மதுரையிலிருந்து கரிய நிறத்தோலுடனும்,சிவந்த கண்களுடனும் சென்னை சினிமாக்களம் வந்த விஜயகாந்த்தை ஆரம்பத்தில் பலர் கேலியும் கிண்டலுமாகப் பேசினர் பின்னர் விஜயகாந்தின் நடிப்பாற்றலைப் போற்றத் தொடங்கினர்.
“சட்டம் ஒரு இருட்டறை” வெற்றிக்குப் பின் விஜயகாந்த் எஸ்.ஏ.சந்திரசேகரன் கூட்டணி சுமார் இருபதிற்கும் மேலான படங்களில் கரம் கோர்த்து வெற்றி கண்டனர்.தொடர் தோல்வி படங்களால் துவண்டு போன தன் மகன் விஜயை விஜயகாந்துடன் இணைத்து “செந்தூர பாண்டி”படத்தில் நடிக்க வைத்து மீண்டும் பிரகாசிக்கச் செய்தார் இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரன். குறுகிய காலத்தில் தமிழகத்தின் பேசு பொருளானார் விஜயகாந்த்.
தொடர்ந்து சாதிக்கொரு நீதி,சிவப்பு மல்லி,நீதி பிழைத்தது என சில வெற்றிப் படங்களை அளித்தார்.தமிழில் அமோக வெற்றி பெற்ற “சட்டம் ஒரு இருட்டறை” பின்னர் ஹிந்தியில் “அந்தா கானூன்” என்ற பெயரில் வெளியாகி அமோக வெற்றி பெற்றது.தமிழில் விஜயகாந்த் செய்த வேடத்தை ஹிந்தியில் ரஜினிகாந்த் செய்தார்.இப்படத்தில் அமித்தாப்பச்சனும் ஹேமமாலினியும் நடித்தனர்.ஒரே ஆண்டில் மட்டும் 18 படங்களில் நடித்து சாதனை படைத்தார் விஜயகாந்த்.
தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தருடன் நட்பு கொண்டு பல வெற்றிப் படங்களில் நடித்தார்.ராவுத்தருடன் பல ஆண்டுகளாக நீடித்த நட்புடன் இருந்தவர் கெப்டன்.ராவுத்தர் பில்ம்ஸ் தயாரித்த “உழவன் மகன்” 1984 ஒக்டோபர் 19 அன்று திரைக்கு வந்து இமாலய வெற்றி கண்டது.மக்கள் திலகம் எம்ஜியார் இப்படத்தை பார்த்து விட்டு விஜயகாந்தை நேரில் அழைத்து ராமாபுர இல்லத்தில் விருந்தளித்து பாராட்டினார்.
அநேகமாக எம்ஜியார் பார்த்த கடைசிப் படம் இதுவாகத் தானிருக்கும்.இதே ஆண்டு டிசம்பர் 24 இல் மக்கள் திலகம் எம்ஜியார் மறைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு உதவுமுகமாக ஆபாவாணன் தயாரிப்பில் அரவிந்த்ராஜ் இயக்கத்தில் “ஊமை விழிகள்”படத்தில் நடித்து வெற்றி பெறச் செய்தார்.
இப்படத்தில் காவல் துறை அதிகாரி தீனதயாளு வேடத்தில் நடித்து அசத்தினார் விஜயகாந்த்.தொடர்ந்து சத்ரியன், பரதன்,கறுப்பு நிலா,தர்மா போன்ற வெற்றி படங்களை வழங்கினார். “தங்கப்பதக்கம்” படத்தில் காவல்துறை அதிகாரி எஸ்.பி.சௌத்ரியாக நடிகர் திலகம் சிவாஜி கணேசன் நடித்து அசத்தினார்.இப்படத்திற்கு பின் காவல்துறை அதிகாரி வேடத்திற்கு மிகப்பொருத்தமானவர் விஜயகாந்த் என பேசப்பட்டார்.அதற்கு சான்றாக “ஊமை விழிகள்”,சத்ரியன்”,”ராஜதுரை”சேதுபதி ஜபிஎஸ்”,வாஞ்சிநாதன்,”புலன் விசாரணை”, கெப்டன் பிரபாகரன்,நரசிம்மா” போன்ற படங்களைக் கூறலாம்.சண்டைப் படங்களில் அதிரடியாக நடித்த விஜயகாந்த் “வைதேகி காத்திருந்தாள்”படத்தில் வெள்ளைச்சாமி என்ற குணச்சித்ர வேடத்தில் நடித்து அசத்தினார்.
இப்படத்தின் இயக்குனர் ஆர்.சுந்தர்ராஜன்.ஆர்.கே.செல்வமணியின் முதல் இயக்கத்தில் இவர் நடித்த “புலன் விசாரணை” பல அரங்குகளில் 200 நாட்களைக் கடந்து ஓடி சாதனை படைத்தது.தொடர்ந்து வல்லரசு,ரமணா, கெப்டன் பிரபாகரன்,மாநகரக்காவல், வாஞ்சிநாதன்,நரசிம்மா,சேதுபதி ஜ.பி.எஸ்.வானத்தைப் போல,தவசி, சின்னக்கவுண்டர் என பல வெற்றிப் படங்களை தந்தார்.நடிகர் திலகம் சிவாஜி கணேசனுடன் வீரபாண்டியன் படத்தில் நடித்தார். பாரதிராஜாவுடன் தமிழ்ச் செல்வனில் கரம் கோர்த்தார்.தமிழ்ச் செல்வன் படத்தில் விஜயகாந்த் அமைதியே உருவான ஐ.ஏ.எஸ் அதிகாரியாக குணச்சித்திர வேடத்தில் நடித்து பாராட்டுப் பெற்றார்.
“”கரிமேடு கருவாயன்”,அம்மன் கோயில் கிழக்காலே”,”வானத்தைப் போல”,” சொக்கத்தங்கம்””,தவசி” “சின்னக்கவுண்டர்” போன்ற படங்களில் நடித்ததன் மூலம் கிராமத்து மக்களின் ஏகோபித்த அபிமானத்திற்குரியவரானார்.
நடிகவேள் எம்.ஆர்.ராதாவின் மகளும் நடிகையுமான ராதிகாவிற்கும் இவருக்கும் 80 களில் சில நெருக்கம் இருந்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.இதைத் தவிர வேறெந்த கிசுகிசுக்களிலும் சிக்காதவர் விஜயகாந்த். பின் அக்கா விஜயலட்சுமியின் அறிவுரையின் பெயரில் பின்னாளில் முறைப்படி தன் சாதியைச் சேர்ந்த பிரேமலதாவை மணந்தார் விஜயகாந்த்.
தமிழில் “அன்னை பூமி” என்ற முதல் 3d படத்தில் நடித்த பெருமை கண்டிப்பாக இவரையே சாரும். கமலஹாசன்,ரஜினிகாந்த் போன்ற வசூல் நாயகர்களுக்கு இணையாக விஜயகாந்த் அதிரடி வசூல் நடிகராக பல ஆண்டுகள் கோலோச்சினார். மக்கள் திலகம் எம்ஜியாரின் படங்களில் வரும் புரட்சிகர வசனங்களை தன் படங்களிலும் வரும்படி திரைக்கதை அமைத்து நடித்து தமிழகத்தில் கணிசமான ரசிகர்களை தன் வசம் ஈர்த்துக் கொண்டார். தமிழ் சினிமாவில் குறுகிய காலத்தில் உயர்ந்த விஜயகாந்த் அனைவரிடமும் சாதாரணமாகவே பழகினார்.
அனைவருக்கும் உதவும் கொள்கை அப்போதிருந்தே விஜயகாந்திற்கு தோன்றியது.கடைசி வரை இவரது படப்பிடிப்பு தளங்களில் அனைத்து தொழிலாளிகளுக்கும் ஏற்ற தாழ்வின்றி ஒரே விதமான உணவுகளை வழங்கியதுடன் தானும் அவர்களுடனே அமர்ந்து உண்ணும் பழக்கத்தையும் கொண்டார்.நலிவுற்ற தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், ,கலைஞர்கள் என பலர் வாழ்வில் ஒளியேற்றியவர் விஜயகாந்த்.
2001 இல் வானத்தைப் போல வெளியான ஆண்டில் கலைமாமணி விருதினையும்,சிறந்த குடிமகன் விருதையும்,2011இல் மதிப்புறு முனைவர் பட்டமும் பெற்றார். யாருக்கேனும் பிரச்சனை என்றால் எம்ஜியாருக்குப் பின் முன்னிற்பவர் இவர்.விஜயகாந்தின் சினிமா அலுவலகம் வாய்ப்புக்காக போராடும் உதவி இயக்குனர்கள்,கலைஞர்கள் தங்கும் தாய்வீடாக மாறியிருந்தது.80களில் தமிழ் சினிமாக் கனவுகளோடு சென்னைக்கு குடியேறிய பலருக்கும் அது தான் புகழிடம்.
இவ்வலுவலகத்தில் பலமுறை உதவி இயக்குனர்களுடன் கூடவே இரவில் படுத்து உறங்கி காலையில் சூட்டிங் சென்றுள்ளார் விஜயகாந்த்.இவரின் படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்பிற்கும் ஒரே உணவு என்பது விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டிய சமபந்தி சமத்துவம்.அதுநாள் வரை நடிகர்களுக்கு ஒரு உணவு, தொழில்நுட்ப கலைஞர்களுக்கு ஒரு உணவு, சாதாரண தொழிலாளர்களுக்கு ஒரு உணவு என்ற நிலையை மாற்றி அனைவருக்கும் ஒரே மாதிரியான சைவ அசைவம் கிடைக்கும் வகையில் விஜயகாந்த் செய்த சமபந்தி என்பது அன்றைய காலத்தில் சினிமா தொழில்நுட்ப கலைஞர்கள் அனைவருக்கும் நல்ல சாப்பாடு கிடைக்க வழி செய்தது.
விஜயகாந்த் வீட்டில் வழங்கப்படும் உணவு என்பது விருகம்பாக்கம் பக்கத்தில் வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குனர்கள் பலருக்கும் கிடைத்த வரப்பிரசாதம். இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக இருக்கும் இயக்குனர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டில் உணவு உண்டவர்கள் என்பது விஜயகாந்த் புகழ் தமிழ் சினிமாவில் இன்னும் நிலைத்திருக்க முக்கிய காரணமாக அமைந்தது .
இவரது சினிமா அலுவலகத்தில் எப்போதும் உணவு தயார் நிலையில் இருக்கும். எவர் வரினும் இல்லை எனாது வயிறு நிறைய விருந்தளித்தே அனுப்பும் வழக்கம் கொண்டவர் விஜயகாந்த். “எம்ஜிஆரைப் போல் அள்ளிக் கொடுத்தோர் யாருமில்லை அதைச் சொல்லிக் காண்பித்தவர் விஜயகாந்த்” என பல மேடைகளில் நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.
குஜராத் பூகம்பம்,கார்கில் போர் தருணங்களில் பல லட்சங்களை வாரி வழங்கினார். பல இலவச கணிணி மையங்கள்,இலவச திருமணங்கள்,மக்கள் திலகம் எம்ஜியாரின் ராமாபுர தோட்ட காது கேளாதோர் அறநிலையத்திற்கு பல லட்சக் கணக்கில் நன்கொடைகள் என பல்வேறு நலத்திட்டங்களுக்கு உதவிக்கரம் நீட்டினார்.
இந்தியாவில் ஏதேனும் அனர்த்தங்கள் நேரின் முதல் நன்கொடை இவருடையதாகவே இருக்கும்.ஈழத் தமிழர்கள் மீது அளவு கடந்த பற்று கொண்டவர் விஜயகாந்த். இவர்களுக்காக பல போராட்டங்களையும்,உண்ணா விரதங்களையும் மேற்கொண்டார்.இலங்கை அகதிகள் தங்கியிருக்கும் மண்டபம் பகுதி மக்களுக்கு பல வழிகளில் உதவியுள்ளார் கெப்டன்.தமிழ்நாட்டில் பல நலத்திட்டங்களை பல்வேறு மாவட்டங்களுக்கு ஆற்றியுள்ளார்.
கோவை,ஈரோடு,புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் இலவச கண் சிகிச்சை நிலையங்கள்,மருத்துவ மனைகள் என பல அமைப்புகளை செய்து கொடுத்தார். 1996 இல் அதிமுக ஆட்சியில் இருந்த போது கலைஞர் கருணாநிதிக்கு தமிழ் திரையுலகின் சார்பில் பெருந்துணிச்சலுடன் சென்னை மெரீனா கடற்கரையில் இவர் தலைமையில் பொன்விழா எடுத்து கலைஞர் கருணாநிதிக்கு தங்கப் பேனா ஒன்றை பரிசளித்தார்.
நடிகர் திலகம் சிவாஜி கணேசனால் தொடங்கப்பட்டு சம்பிரதாயத்திற்கு நடத்தப்பட்டு வந்த நடிகர் சங்கம் கடனில் மூழ்கி திவாலாகும் நிலையில் இருந்தது. இப்பொது சென்னை ஹபிபுல்லா சாலையில் இருக்கும் இவ்வளவு பெரிய இடம் கடனில் முழுகுவதா என களத்தில் இறங்கி, தமிழர்கள் பெரும்பாலும் வாழும் சிங்கப்பூர் மற்றும் மலேசியா நாடுகளில் கலை நிகழ்ச்சிகள் நடத்தி நடிகர் சங்க கடனை அடைத்து நடிகர் சங்கத்திற்கு ஓரு பெரும் நிதியை வங்கியில் வைப்பு தொகையாக செய்தார். விஜயகாந்தால் மட்டுமே அந்த காலகட்டத்தில் செய்ய முடிந்த சாதனை இது..
திரை நட்சத்திரங்களில் உச்ச நட்சத்திரங்களாக திகழ்ந்த ரஜினி கமல் உள்ளிட்ட ஒரு பெரும் நடிக நடிகைகள் படையை மலேசியா, சிங்கப்பூர் அழைத்து சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் ஓர் பெரும் தொகை வசூல் செய்யப்பட்டது.
இது விஜயகாந்தின் சரித்திர சாதனையாக தமிழ் சினிமா இருக்கும் வரை பேசிக் கொண்டே இருக்கும் அளவிற்கு அனைவர் நெஞ்சங்களில் நீங்காத இடம் பிடித்தவர் விஜயகாந்த். இவரது தயாள குணத்தால் ரசிகர்கள் வட்டம் நாளுக்கு நாள் விசாலமானது.நடிகர் ரஜினிகாந்த் கமலஹாசன் போன்ற நடிகர்களுக்கு நூறாவது படம் வெற்றி பெறாது என்ற சென்டிமென்ட் தொடர்ந்த போது தனது நூறாவது படமான கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தை மாபெரும் வெற்றி படமாக்கி ஒட்டு மொத்த தமிழகத்தையே மிரட்டியது விஜயகாந்தின் ரசிகர்கள் பட்டாளம்.
இவரின் நூறாவது படமான “கெப்டன் பிரபாகன்” 200 நாட்களுக்கு மேல் ஓடி இமாலய சாதனை படைத்தது. இதன் பின் இவர் “கெப்டன்”என ரசிகர்களால் அழைக்கப்பட்டார்.எளிய தோற்றமாய் கறுப்பு நிறம் கொண்ட மனிதர்கள் சினிமா துறையில் வெற்றி பெற முடியும் என்ற நம்பிக்கையை தமிழ் சினிமாவில் உள்ள பலருக்கும் விதைத்ததில் ரஜினிகாந்த்துக்குப் பின் விஜயகாந்த்திற்கு பெரும்பங்கு உண்டு.
“கெப்டன்” என்ற பட்டமே நாளடைவில் விஜயகாந்த் அரசியலில் ஈடுபட தொடக்கப்புள்ளியாய் அமைந்தது எனக் கூறலாம்.1979 இல் தென்னிந்திய “விஜயகாந்த் ரசிகர் மன்றம்” உருவானது.1982களில் இது பல கிளைகளாக தமிழ் நாட்டில் பல நகர்களில் வேரூன்றியது.1990.ஜனவரி 31 இல் தனது 37 வது வயதில் தொழிலதிபர் எல்.சி.கன்னையா,அம்சவேணி இணையரின் மகளான பிரேமலதாவை கரம் பிடித்தார்.
தன்னுடன் பிறந்த சகோதரர்களின் திருமணத்திற்குப் பின்பே இவர் மணம் முடித்தார்.இவர்களின் திருமணம் மதுரை மாநகரம் அதிர கலைஞர் கருணாநிதி தலைமையில் இளையராஜாவின் கச்சேரியுடன் விழாக்கோலம் கொண்டதாக அமைந்து. மதுரை ராஜா அண்ணாமலை மன்றத்தில் இத்திருமண விழாவில் பங்கு பற்றிய ஆயிரக்கணக்கானோர்களுக்கு பகல் இரவு பாராது பிரியாணி உணவு வழங்கப்பட்டது.
இவ்விழாவில் மக்கள் திலகம் எம்ஜியாரின் பாரியார் திருமதி ஜானகி அம்மையார் கலந்து கொண்டு எம்ஜியார் அணிந்திருந்த ஓர் தங்க மோதிரத்தையும், “உலகம் சுற்றும் வாலிபன்”படத்தில் எம்ஜியார் பயன் படுத்திய கோர்ட் பேண்ட்டையும் விஜயகாந்திற்கு பரிசாக வழங்கினார். விஜயகாந்த் மனைவி குழந்தைகளுடன் ஒரு சமயம் எம்ஜியாரின் ராமாபுர தோட்டம் சென்ற போது ஜானகி அம்மையார் எம்ஜியார பயன்படுத்திய தேர்தல் பிரச்சார வாகனத்தை விஜயகாந்திற்கு அன்பளிப்பாக வழங்கினார்.
ஜெயலலிதா,திருநாவுக்கரசு,ஆர்.எம்.வீரப்பன் போன்றோர் கேட்டும் கிடைக்காத மக்கள் திலகம் எம்ஜியாரின் பிரச்சார வாகனம் விஜயகாந்திற்கு கிடைத்தது.இதில் தங்க மோதிரத்தையும்,கோர்ட் பேண்ட்டையும் விஜயகாந்த் தனது பூஜை அறையில் பொக்கிஷமாக பாதுகாத்து வருகிறார்.
விஜயகாந்த் பிரேமலதா தம்பதிகளுக்கு விஜயபிரபாகரன்,ஷண்முகப்பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். .இதில் ஷண்முகப்பாண்டியன் என இரு மகன்கள் உள்ளனர். .இதில் ஷண்முகப்பாண்டியன் “சகாப்தம்”,தமிழன் என்று சொல்லடா”,”மித்ரன்”,”மதுரவீரன்” போன்ற படங்களில் நடித்தார்.தமிழைத் தவிர வேறு மொழிப்படங்களில் நடிப்பதில்லை” என்ற கொள்கையை கடைசி வரை கடைபிடித்தவர் விஜயகாந்த். இவரது பல படங்கள் மொழிமாற்றம் (டப்பிங்)செய்யப்பட்டு பிற மாநிலங்களில் வெற்றியாக ஓடியது என்பது குறிப்பிடத்தக்கது. விஜயகாந்த் “இனிக்கும் இளமை” தொடங்கி “சகாப்தம்” வரை மொத்தம் 154 படங்களில் நடித்துள்ளார்.
கடைசி படமான “சகாப்த”த்தில் தன் மகன் ஷண்முகப்பாண்டியனுடன் ஒரு சில காட்சிகளில் நடித்தார்.ஸ்ரீ ஆண்டாள் அழகர் கல்லூரி ,கெப்டன் தொலைக்காட்சி நிறுவனம் என பின்னாளில் பல நிறுவனங்களை தொடங்கினார்.
விஜயகாந்த் ஓர் சிறந்த கடவுள் பக்தராவாரார். சபரிமலைக்கு இதுவரை 18 முறை மாலை அணிந்து சென்று ஐயப்பனை வழிபட்டுள்ளார்.
தன் சொந்த ஊரான மதுரைத் திருமங்கலத்தில் உள்ள ஓர் பாழடைந்த ஆலயத்தை பெரும் செலவில் புனரமைத்து கும்பாபிஷேகம் செய்துள்ளார்.இவ்வாறு ஆன்மிகத் துறைக்கும் தன் பங்களிப்புகளை வழங்கியவர் விஜயகாந்த். தனது ஒவ்வொரு பிறந்த நாளிலும் ஏழை எளிய மக்களுக்கு தையல் இயந்திரம்,முச்சக்கர மிதி வண்டி,மின் அழுத்தி போன்ற உபகரணங்களை மறக்காமல் வழங்கினார் விஜயகாந்த்.
தமிழக மக்களின் பேரபிமானத்தை பெற்ற விஜயகாந்த் 2001 ஆம் ஆண்டில் அரசியலுக்கு நேரடியாக வெள்ளோட்டம் விடும் வண்ணம் அவ்வாண்டு நடைபெற்ற உள்ளாட்சி தேர்தல்களில் விஜயகாந்த் தனது ரசிகர்களை பல இடங்களில் போட்டியிட்டு வெற்றி வாகை சூடச்செய்தார்.இதன் பின் மிகுந்த நம்பிக்கையுடன் 2005 ஆம் ஆண்டில் கட்சி ஆரம்பிக்கப் போவதாக திருவண்ணாமலையில் அறிவித்தார் விஜயகாந்த். அதன்படி 2005 .செப்டம்பர் 14 அன்று மதுரையில் நடைபெற்ற மாநாட்டில் “தேசிய முற்போக்கு திராவிட கழகம் “என்ற பெயரில் ஓர் புதிய கட்சியை உருவாக்கினார்.
விஜயகாந்த் ரசிகர் மன்றக் கொடியின் சின்னமான கரமேந்திய தீச்சுடரை கட்சியின் கொடியாகவும்,சின்னமாகவும் அமைத்தார். 2006 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தே.மு.தி.க 234 தொகுதிகளில் போட்டியிட்டு 8.4 சதவீத வாக்குகளைப் பெற்று மூன்றாவது இடத்தை அடைந்து மக்கள் செல்வாக்கைப் பெற்றது.
இத்தேர்தலில் விஜயகாந்த் விருத்தாச்சலம் தொகுதியில் போட்டியிட்டு இவர் மட்டும் முதல் முறையாக சட்டமன்ற உறுப்பினராக சட்ட சபை சென்றார்.விஜயகாந்தின் அரசியல் பிரவேசம் முழு இந்தியாவிலும் பிரகாசித்தது.2009 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 10 சதவீத வாக்குகளைப் பெற்றது.
தே.மு.தி.க.2011 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ஜெயலலிதாவின் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து 29 தொகுதிகளில் வெற்றி வாகை கண்டார் கெப்டன் விஜயகாந்த். இத் தேர்தலில் விஜயகாந்த் ரிஷிவந்தியம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி அடைந்தார். இத் தேர்தலில் தமிழகத்தின் அசைக்க முடியாத கட்சியான திமுகவை மூன்றாம் இடத்திற்கு தள்ளி இரண்டாவது இடத்திற்கு வந்தது தேமுதிக.இடையில் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக கூட்டணியில் விரிசல் ஏற்பட்டது.
கலைஞராலும் எதிர்க்க முடியாத இரும்புப் பெண்மணியான ஜெயலலிதாவை துணிச்சலுடன் எதிர்த்தார்.இதனால் பல பக்க விளைவுகளையும் எதிர்கொள்ள வேண்டிய சூழ்நிலைக்கும் ஆளானார்.அதுவரை யாரும் இவரைப் போல் துணிச்சலுடன் ஜெயலலிதாவை எதிர்த்து பேசியதில்லை.
அதன் பின் 2009 இல் இடம்பெற்ற இந்திய நாடாளுமன்ற தேர்தலில் “மக்களுடனும் கடவுளுடனும் மாத்திரமே கூட்டணி”என தேமுதிக களம் கண்டு பத்து சதவீத வாக்குகளைப் பெற்றது.ஆயினும் இக்கூட்டணியில் எவரும் வெற்றி பெறவில்லை.2006 முதல் 2016 வரை தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகவும்,2011 முதல் 2016 வரை எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தார் விஜயகாந்த்.2016இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் “மக்கள் நலக் கூட்டணி”யைஅமைத்து கையை சுட்டுக்கொண்டார் விஜயகாந்த்.
இத்தேர்தலில் விஜயகாந்த் உட்பட அனைவரும் தோல்வி கண்டனர். இத் தேர்தலில் விஜயகாந்த் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்டார்.40 ஆண்டுகள் சினிமாவிலும்,20 ஆண்டுகள் அரசியலிலும் தன் ஆளுமையை செலுத்தியவர் கெப்டன். நேரமும் காலமும் யாரைத்தான் விட்டு வைத்தது அந்த அடிப்படையில் விஜயகாந்த் பல தடவைகள் பல சறுக்கல்களை சந்தித்தார்.
அரசியலில் ஒரு சிலரின் சூழ்ச்சிகளுக்கு பலியாகி தொடர் தோல்விகளால் துவண்டு போன கெப்டன் மதுவுக்கு அடிமையாகி நிலை குழைந்ததாக ஊடகங்கள் விமர்சனம் வெளியிட்டன.பெரும் செல்வந்தராக வலம் வந்த கெப்டன் சொத்துக்களை விற்கும் நிலைக்கு ஆளானார்.குடும்ப உறவுகள் சிலராலும் ஏமாற்றப்பட்டதாகவும் தகவல்கள் கசிந்தன.சினிமாவில் சிங்கம் போல் சீறிப் பாய்ந்து வீர வசனம் பேசிய விஜயகாந்த் மன அழுத்த நோயினால் வெகுவாக பாதிக்கப்பட்டு பின்னாளில் மேடைகளில் உளறும் வண்ணம் பேசத் தொடங்கினார்.
சில ஊடகங்கள் இவரை ஓர் கொமிடியனாக சித்தரித்து வேடிக்கை பார்த்தன.குறிப்பாக ஜெயா டிவி இவரின் பேச்சுக்களையும் நடவடிக்கைகளையும் கேலி செய்யும் வண்ணம் ஓளிபரப்பு செய்தது.இதனால் ஆத்திரமடைந்த விஜயகாந்த் சில ஊடகங்களை வெறுத்தார். ஒரு சில பத்திரிகைகளில் “விஜயகாந்த் பேசாமல் தன் வாழ்க்கையை சினிமாவுடன் நிறுத்தி இருக்கலாம் பாழும் அரசியலில் ஈடுபட்டு தன் வாழ்வை தானே சீர்குழைவு செய்து விட்டதாகவும் எழுதின.2015 முதல் இன்று வரை கடும் உடல்நலக்குறைவு காரணமாக தொடர்ந்து மருத்துவ சிகிச்சைகளிலேயே விஜயகாந்தின் வாழ்நாள் கழிந்தன. சிங்கப்பூர் போன்ற நாடுகளிலும் இவருக்கு உயர் சிகிச்சை அளிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக கடும் நோயால் அவதிப்பட்ட விஜயகாந்த் இரண்டு நாட்களுக்கு முன்னதாக தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.ஏற்கனவே சுவாசக் கோளாறு மற்றும் நிமோனியா காரணமாக அல்லலுற்ற நிலையில் கொரோனா தொற்றும் ஏற்பட்டதாக மருத்துவமனை அறிவித்திருந்த தருணத்தில் சிகிச்சை பலனின்றி கெப்டன் விஜயகாந்த் இன்று (28.12.2023) காலமானார்.
“கலைத்துறையில் பலர் ஆளுமை செய்யினும் ஒரு சிலரே மக்கள் மனதில் சிம்மாசனமிட்டு பல யுகங்கள் வாழ்வர்.அவ்வகையில் தமிழ் சினிமா மற்றும் அரசியலில் மக்கள் திலகம் எம்ஜியார்,நடிகர் திலகம் சிவாஜி கணேசன் வரிசையில் இடம் பெற்ற நடிகர் கெப்டன் திரு.விஜயகாந்த் என்றால் அது மிகையாகாது.
மக்கள் திலகம் எம்ஜியாருக்குப் பின் வாரிக் கொடுத்த வள்ளல் என மக்களால் கொண்டாடப்பட்ட கெப்டன் விஜயகாந்த் கோடிக்கணக்கான மக்களை மீளாத்துயரில் ஆழ்த்தி இம் மண்ணக வாழ்விற்கு விடையளித்து விண்ணகம் சென்று விட்டார்”.
“யுகங்கள் பல கடந்தாலும் கெப்டன் விஜயகாந்தின் புகழ் நிலைத்து நிற்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை”
“திரு.விஜயகாந்த் அவர்களின் மறைவுக்கு இலங்கை ரசிகர்கள் சார்பாக எமது துயர் நிறைந்த கண்ணீர் அஞ்சலியையும்,ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கின்றோம்”.