”ஊர்ல இருந்து ஏதாவது சாதிக்கணும்னு சென்னைக்குப் பெட்டி படுக்கையுடன் வந்தவங்களில் நானும் ஒருத்தன். பத்து வருஷம் ஆர்.ஜே, அப்புறம் விஜய் டிவியில ஆங்கர், இப்போ நடிப்புனு ஓடிட்டு இருக்கேன். பல அவமானங்கள், தோல்விகளை எல்லாம் சந்திச்சு ‘நண்பன்’ படத்துல சொல்ற மாதிரி ‘லைஃப் இஸ் எ ரேஸ்’னு வேகமா ஓடிட்டு இருக்கேன் ப்ரதர்’’ என அவருக்கே உரிய உற்சாகக் குரலில் தன் பயணத்தைப் பற்றி பேச ஆரம்பிக்கிறார் மா.கா.பா ஆனந்த்.
ஆர்.ஜேவா இருந்த உங்களுக்கு வி.ஜே ஆகணும்னு எப்போ தோணுச்சு?
’’ஒரு காலகட்டத்துல லவ் ஃபெய்லியராகி தாடி எல்லாம் வெச்சுட்டு சுத்திட்டு இருந்த சமயம். அப்போ என் நண்பன் சின்னையாதான், ‘நம்ம மத்தவங்க பின்னாடி சுத்திட்டு இருக்கிறதை விட நம்மகிட்ட நீங்க என் வாழ்க்கைத்துணையா வந்தா நல்லாயிருக்கும்னு சொல்ற அளவுக்குப் பெரிய லெவலுக்குப் போகணும்’னு சொல்லிட்டே இருப்பான். வாழ்க்கையில பெரிய ஆளாகணும்னா ஒண்ணு பணம் வேணும், இல்லைனா புகழ் வேணும்னு தோணுச்சு. ஒரு ஆஃபிஸுக்குப் போய் வேலை செஞ்சு பணம் சம்பாதிக்கிற அளவுக்குப் பொறுமை கிடையாது. அதனால, நம்ம ஆர்.ஜே ஆனா சரியா இருக்கும்னு தோணுச்சு. மூணு வருஷமா வாய்ப்பு தேடி ஒரு வழியா கிடைச்சு அதுக்குள்ள பத்து வருஷம் ஓடிடுச்சு ப்ரதர். சரி, டிவியில வாய்ப்பு தேடுவோம்னு தேட ஆரம்பிச்சேன். நிறைய இடங்கள்ல என்னை உள்ளேயே விடலை. அப்புறம், என் ஃப்ரெண்டோட ஃப்ரெண்ட் விஜய் டிவியில ப்ரோட்யூசரா இருந்தார். அவர் மூலமாதான் ஒரு 20 நிமிஷ நிகழ்ச்சியில கொஞ்ச நேரம் மட்டும் வர வாய்ப்பு கிடைச்சுது. அந்தக் கொஞ்ச நேரம் கிடைக்குற வாய்ப்பை பயன்படுத்திக்கணும்னு ப்ளான் எல்லாம் பண்ணி பாராட்டு வாங்குனேன். அப்படியே கிடைக்கிற வாய்ப்பை மிகச்சரியா பயன்படுத்தணும்னு ஓடி ஒடி இப்போ அந்த சேனல்ல முக்கியமா நாலு பெரிய ஷோல ரெண்டு நான் பண்ணிட்டு இருக்கேன். இதான் ப்ரதர் நீங்க கேட்ட எஸ்.டி.டி (ஹிஸ்டரி).’’
விஜே டு ஹீரோ ஆகணும்னு நீங்க ப்ளான் பண்ணதா. இல்லை உங்களைத் தேடி வந்துச்சா?
‘’நான் ஆர்.ஜேவா இருந்த போது ஒரு இன்டர்வியூக்கு சுந்தர்.சி சார் வந்தார். அவர்தான் ‘நீ படம் பண்ணலாமே. நம்ம படத்துல நடி’னு சொன்னார். ஆனா, ‘சும்மா சொல்லாதீங்க. இப்படித்தான் சொல்வீங்க. அப்புறம், மறந்துடுவீங்க’னு சொல்லி கலாய்ச்சிட்டேன். சரினு அவர் நம்பர் வாங்கி வெச்சிருந்தேன். ஆனா, கால் பண்ணி பேச கூச்சமா இருந்துச்சு. நான் ஹீரோ கேரக்டர் எல்லாம் பண்ணுவேன்னு நினைக்கவே இல்லை. ஆர்.ஜேவா இருந்த போது ஒரு பெரிய படத்துல சின்னதா ஒரு ரோல் பண்ணா போதும்னு நினைச்சேன். விஜே ஆனதுக்குப் பிறகு அதையும் மறந்துட்டேன். ‘வானவராயன் வல்லவராயன்’ பட டைரக்டர் என்னை அந்தத் தம்பி கேரக்டருக்கு நடிக்க கூப்பிட்டார். அப்படித்தான் சில்வர் ஸ்கிரீன்குள்ள வந்தேன்.’’
கதைகளை எப்படித் தேர்ந்தேடுக்குறீங்க. விஜேயிங் டு நடிப்பு எப்படி இருக்கு?
’’காமெடி ஸ்கிரிப்ட் மட்டும்தான் என்னைத் தேடி வருதுனு நான் ஃபீல் பண்ணலை. என்கிட்ட கதை சொல்லவாச்சும் வர்றாங்களேனு சந்தோசமாதான் இருக்கு. வித்தியாசமான ஸ்கிரிப்ட் இருந்தா நிச்சயம் மத்த ரோல்களும் பண்ணுவேன். சில கதைகளைக் கேட்கும்போது எனக்கு இது ஒத்துவராதுனு தெரிஞ்சுடும். அப்போ கதைகளைத் தவிர்க்கவும் செஞ்சிருக்கேன். ஆர்ஜே, விஜே ரெண்டுலேயும் நம்ம நம்மளா இருப்போம். ஆனா, கதைக்குள்ள நம்ம மத்தவங்களா இருப்போம். அப்போ இயக்குநர் என்ன சொல்றாரோ அதை கரெக்டா பண்ணணும்னு மட்டும்தான் யோசிப்பேன். ஒரு படம் கமிட் ஆனோம்னா என்னை அப்படியே டைரக்டர்கிட்ட கொடுத்திடுவேன். அதான் என்னை மாதிரியான ஆர்டிஸ்ட்களுக்கு பெட்டர்னு நினைக்குறேன்.’’
உங்க படங்களுடைய ரிசல்ட்டை எப்படி எடுத்துக்குறீங்க?
’’இல்லை ப்ரதர். எனக்கு 14 வருஷத்துக்கு முன்னாடி எனக்குப் பெரிய கம்பெனில வேலை கிடைச்சுது. ஆனா, நான் வீட்ல பொய் சொல்லி, சண்டை போட்டு குடும்பத்தை விட்டு சென்னை வந்தேன். அதுக்கு அப்புறம் நல்ல சாப்பாடு சாப்பிடாம, வீட்டு வாடகை குடுக்க முடியாம கிடைக்குற வேலையைப் பண்ணிட்டு கஷ்டப்பட்டுட்டு இருந்தேன். அப்போ 3,500 ரூபாய் சம்பளத்துக்கு ஆர்.ஜே வேலை கிடைச்சுப் போனேன். என்கிட்ட ஒன்னுமே இல்லாத டைம்லயே அவ்ளோ நம்பிக்கையா இருந்தேன். எல்லாமே எனக்கு வெயிட்டிங்லதான் கிடைக்குது. அதுலயே அப்படினா, பெரிய கடல் மாதிரி இருக்க சினிமால ஒரே நாள்ல உச்சத்துக்குப் போக முடியுமா. இதுக்கு நான் ரெண்டு மடங்கு சேர்த்து வெயிட் பண்ணணும். அந்த வெயிட்டிங் டைமாதான் இதைப் பார்க்குறேன். என் படம் பத்து நாள்தான் ஓடுது. அதுக்குள்ள தியேட்டர்ல இருந்து தூக்கிடுறாங்களே… நல்ல பாராட்டு கிடைக்கலையேனு நான் வருத்தப்படக் கூடாது. அதை நான் எதிர்பார்க்கவும் இல்லை. ஒரு நாள் எல்லாம் மாறும். ஆனா, அதுவரைக்கும் நான் நம்பிக்கைய விடாம உழைச்சிட்டே இருக்கணும். அவ்ளோதான் ப்ரதர்.’’
சிவகார்த்திகேயன் பாணிலயே மா.கா.பாவும் டிவியில இருந்து சினிமாவுக்குப் போனார். ஆனா, அவர் இன்னும் அந்த அளவுக்கு ஜொலிக்கலையேங்கிற விமர்சனம் உங்க மேல இருக்கே…
’’அப்படிச் சொல்றவங்களுக்கு நான் தெளிவுப்படுத்தணும்னு நினைக்குறேன். டிவியில இருந்து சினிமாவுக்கு வந்துட்டாருப்பானு ஈஸியா சொல்லிடுறாங்க. அதுக்கு, அவங்க எவ்ளோ உழைப்பு போடுறாங்க தெரியுமா? உதாரணத்துக்கு, ‘ரெமோ’ படத்துல நர்ஸ் வேஷம் போட்டு நடிக்கிறார்னா சாதாரண விஷயம் இல்லை. ஒன்பது மணி ஷூட்டிங்கிற்கு ரெண்டு மணிக்கெல்லாம் எழுந்து கிளம்பி மேக்கப் போட்டு ஸ்பாட்டுக்கு வந்து சோர்வு முகத்துல தெரியாம நடிக்கிறதுனா சும்மாவா? அது உழைப்புக்கும் மேலனு தான் சொல்லணும். அதுக்கு கிடைச்ச பேர் புகழ் தான் அவரை உயர்த்திருக்கு. நான் இன்னும் அந்தளவு முயற்சி செய்யாம இருக்கலாம். இந்த மாதிரி கம்பேர் பண்ணுவாங்க, சரியாயில்லைனா திட்டுவாங்க. அதுக்கான எல்லா உரிமையும் அவங்ககிட்ட இருக்கு. எனக்கு இது போதும்னு நினைக்கிறேன். நானும் என்னை சுத்தி இருக்கவங்களையும் சந்தோசமா இருக்கணும்கிறது தான் என் சக்சஸ். ரேடியோலயும் டிவியிலயும் என்னால வெயிட் பண்ணி சாதிக்க முடிஞ்சதுனா சினிமாவில சாதிக்க இன்னும் சில காலம் காத்திருக்கணும்னு தெரிஞ்சுதான் உள்ளேயே வந்தேன். வெற்றி வர வரைக்கும் நான் காத்திருப்பேன்.’’
சினிமால நடிச்சிட்டே டிவியிலயும் ரொம்ப ஆக்டிவா இருக்கிங்களே…
’’ஆர்ஜே வேலையை விட மனசில்லாம தான் விட்டேன். ஆர்ஜேயிங்ல இருந்தவரை நாள், கிழமைனு பார்க்காம லீவ் கூட போடாம பேசிட்டே இருந்தேன். எனக்கு அந்த மைக் தான் கேர்ள் ஃப்ரெண்ட் மாதிரி. தினமும் அதுக்கூடவே இருக்கணும். எனக்கும் மைக்குக்கும் உள்ள உறவு வேற லெவலுங்க. அதைவிட்டு வர முடியலை. அதை விட்டாதான் அடுத்த உயரத்துக்கு போக முடியும்னு மனசை கல்லாக்கிட்டு தான் அங்கிருந்து வந்தேன். அதுக்கு பிறகு, அந்த லவ் விஜேயிங் மேல வந்திடுச்சு. எங்க இதுவும் என்னை விட்டு போயிடுச்சுனா இன்னும் டிப்ரஷனாகிடுவேனோனு பயமா இருக்கு. என் வாழ்க்கையில என்ன நடந்தாலும் இந்த வேலையை விடவே மாட்டேன்.’’
இப்போ ‘பஞ்சுமிட்டாய்’, ‘மாணிக்’னு ரெண்டு படங்கள் வெளிவர இருக்கு. அதை பத்தி சொல்லுங்க.
’’பஞ்சுமிட்டாய்’ படம் தான் நான் ரெண்டாவதா கமிட்டான படம். மோகன் சார் டைரக்ஷன். படத்துல சிஜி வொர்க் அதிகமா இருந்தனால தான் இவ்ளோ நாள் கழிச்சு ரிலீஸ் ஆகுது. உண்மையில, ரொம்ப நல்ல அனுபவமா இருந்தது இந்த படம். கல்யாணம் ஆகி முதல் முப்பது நாள்ல நடக்குற சம்பவம் தான் கதை. நிகிலா விமலும் நானும் கணவன் மனைவியா நடிச்சிருப்போம். இதுல எனக்கு டயலாகைவிட எக்ஸ்ப்ரஷனும் பாடி லாங்வேஜும்தான் நிறைய இருக்கு. அடுத்து ‘மாணிக்’ படத்தோட டைரக்டர் மார்டின். அவர் எடுத்த சார்ட் ஃபிலிம் ரெண்டு அனுப்பியிருந்தார். அதை பார்த்திட்டு அசந்து போய் அவர்கிட்ட கதையே சொல்லவேண்டாம் படம் பண்ணலாம்னு சொல்லி நடிச்ச படம் தான் ‘மாணிக்’. அந்த படத்துல எனக்கு ஒரு கிறுக்குத்தனமான கேரக்டர். செம ஜாலியா இருந்துச்சு ப்ரதர்.’’
உங்க கோ ஆங்கர்ஸ் ஒவ்வொருத்தரைப் பத்தி சொல்லுங்களேன்…
‘’கோபி அண்ணா – மீடியா ஃபீல்ட்லையும் சரி பெர்சனலாகவும் சரி, எதாவது பிரச்னைனாவோ, ஒரு கருத்து கேட்கவோ கோபி அண்ணாதான் என் முதல் சாய்ஸ்.
டிடி சிஸ்டர் – ரொம்ப ஜாலியா பேசணும், எனக்கு போர் அடிக்குது, ஒரு எனர்ஜி வேணும்னு நினைச்சா டிடி அக்காக்கு தான் போன் பண்ணுவேன்.
பாவனா – ரொம்ப ப்ரொஃபெஷனல்லா ஒரு விசயம் பேசணும், ஒரு ஐடியாவை செயல்படுத்தணும்னு நினைச்சா பாவனாக்கு கால் பண்ணி பேசுவேன்.
ப்ரியங்கா – வெட்டியா இருக்கோம். யாரையாவது கலாய்க்கலாம், திட்டலாம்னு தோணுச்சுனா ப்ரியங்கா இருக்க பயமேன்.’’
ரக்ஷன், ஜாக்குலின் மாதிரியான உங்க ஜூனியர்ஸ் ஆங்கரிங் பத்தி டவுட்ஸ் கேட்பாங்களா? அவங்களுக்கு என்ன டிப்ஸ் கொடுப்பிங்க?
’’எனக்கு முகத்துக்கு நேரா ‘செமயா பண்றப்பா’னு புகழ்றது எல்லாம் பிடிக்கவே பிடிக்காது. நம்ம யாருனு நமக்கு தெரியவே கூடாது. நம்ம ஜீனியஸ்னு நமக்கு தெரிஞ்சதுனா அதை விட கொடிய நோய் வேற எதுவும் இல்லை. அதனால நான் யாரையுமே பாராட்ட மாட்டேன். அப்படி அவங்க கஷ்டமா இருக்குனு சொன்னாங்கன்னா, அதை அனுபவிச்சு அதிலிருந்து என்ன கத்துக்கறோம்னு பாருங்க. அப்போ தான் பின்னாடி ரொம்ப யூஸ் ஃபுல்லா இருக்கும்னு சொல்லிடுவேன். நான் யாரையும் பாராட்ட மாட்டேன். ஆனா, என்கிட்ட எதாவது ஆங்கரிங் சம்பந்தமா கேட்ட நிச்சயமா என்னால முடிஞ்சதை பண்ணுவேன்.’’
அடுத்து என்னா ப்ளான் வெச்சிருக்கீங்க?
’’நான் எந்த ப்ளானும் இல்லாத ஒரு மனுஷன் பாஸ். முயற்சியும் காத்திருத்தலும் தான் எல்லாம். எனக்கு ஒரு விஷயம் பிடிச்சிடுச்சுனா அதனால என்ன ஆனாலும் பரவாயில்லைனு அந்த பிடிச்ச விஷயத்தை பண்ணிடுவேன். எனக்கு திடீர் திடீர்னு எதாச்சும் ஐடியா வந்துட்டே இருக்கும். இப்போ வாங்க கிரிக்கெட் விளையாடப்போலாம்னு நீங்க கூப்பிட்டா கூட விளையாடணும்னு மனசுல தோணுச்சுனா உடனே வந்திடுவேன். மத்ததை பத்தியெல்லாம் யோசிக்கவே மாட்டேன். இந்த பழக்கம் இதுவரை எனக்கு உதவி தான் செஞ்சிருக்கு” என்று பேசிவிட்டு பாட்டை முணுமுணுத்துக்கொண்டே விடைப்பெற்றார் மா.கா.பா.