அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது பயங்கரவாதத் தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளமைக்கு அரசாங்கம் சர்வதேசத்திற்கு பதில் கூற வேண்டும்.
எனவே இதன் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவர் மீது மாத்திரம் பயங்கரவாதத் தடை சட்டம் பிரயோகிக்கப்பட்டுள்ளது. இவர்களுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஏனையோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
பயங்கரவாத தடைச் சட்டத்தை பிரயோகிப்பதை நிறுத்தியுள்ளதாக வாக்குறுதியளித்துள்ள அரசாங்கம், அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர் மீது காலாவதியாகியுள்ள நீக்கப்பட்டிருக்க வேண்டிய அதனை மீளவும் பிரயோகிக்க ஆரம்பிப்பது மிகவும் மோசமானதொரு விடயமாகும்.
இதனை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம். ஜனநாயக ரீதியாக எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபடுவது அரசியலமைப்பின் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ள உரிமையாகும்.
அதற்காக தண்டனை கூட வழங்க முடியாது. அவ்வாறிருக்க பயங்கரவாதம் எனக் குறிப்பிட்டு அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினரை 3 மாதங்களுக்கு தடுத்து வைத்திருப்பதற்கான நடவடிக்கை மிகவும் வருந்தக் கூடிய விடயமாகும்.
அரசாங்கம் சர்வதேச சமூகத்திற்கு இது தொடர்பில் பதில் கூற வேண்டும். அத்தோடு இவர்கள் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும். அதே போன்று பயங்கரவாத தடைச் சட்டமும் முற்றுமுழுதாக நீக்கப்பட வேண்டும் என்றார்.