மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெறும் படம் எங்களிடம் உள்ளது. ஆனால், அதை எந்த விதத்திலும் வெளியிட விரும்பவில்லை என அதிமுக அம்மா கட்சி துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
போயஸ் தோட்ட இல்லம் ஜெயலலிதாவின் ரத்த வாரிசுகளுக்கே சொந்தம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக ‘தி இந்து’ நாளிதழுக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது:
‘வேதா நிலையம்’ அமைந்துள்ள போயஸ் தோட்டம் பகுதி எங்களுக்கு கோயில் போன்றது. ஜெயலலிதா நம் அனைவருக்கும் தெய்வம் போன்றவர்.
அவரது சொத்தை எடுத்துக்கொள்வதற்கு நான் யார்? தீபா அங்கு வந்ததும், அவரை யார் அழைத்தார்கள் என்பதும் எனக்குத் தெரியாது. டிவி சேனல்களில் வந்த செய்தியை பார்த்துதான் என்ன நடந்தது என்பதை அறிந்தேன்.
ஜெயலலிதாவின் நேர்முக உதவியாளர் பூங்குன்றன், 40 ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்த ராஜம் மற்றும் சிலரே தற்போது போயஸ் தோட்ட இல்லத்தில் உள்ளனர்.
சசிகலா சிறைக்கு சென்ற பிறகு ஒரே ஒருமுறை மட்டும் நான் அங்கு சென்று வந்தேன். அந்த சொத்தை நான் ஏன் கைப்பற்ற வேண்டும். அந்த சொத்து ரத்த வாரிசுகளுக்கு மட்டுமே உரியது.
அப்படி இருக்கும்போது, தீபா என் மீது புகார் தெரிவிப்பது ஏன் என்று தெரியவில்லை. ஜெயலலிதாவின் சட்டப்படியான வாரிசு என்பதை நிரூபித்து அந்த சொத்துகளை அவர் எடுத்துக்கொள்ளலாம். இந்த விவகாரத்தில் எனது பங்கு எதுவும் இல்லை.
அதிமுகவில் 3-வது அணி என்பது இல்லை. முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் தன்னுடன் சில எம்பிக்கள், எம்எல்ஏக்களை வைத்துள்ளார். ஆனால், விரைவில் அவர் தன் முடிவை மாற்றிக்கொண்டு திரும்பி வருவார்.
அவர் மீது உயர்ந்த மதிப்பு உள்ளது. அவர் எனக்கு நல்ல நண்பரும்கூட. அவர் உறுதியாக விரைவில் திரும்பி வருவார். அதிமுகவில் 90 சதவீதம் நிர்வாகிகள் எங்கள் பக்கம் உள்ளனர்.
அணிகள் இணைப்பை உறுதி செய்வதே என் கடமை. கடந்த 4-ம் தேதி பெங்களூரு சிறையில் பொதுச்செயலாளர் சசிகலாவை சந்தித்து, 60 நாட்களுக்குப்பின் கட்சியை ஒன்றிணைக்க தீவிரமாக பணிகளில் ஈடுபடுவேன் என தெரிவித்தேன். அவரும் அதை ஏற்றுக்கொண்டார்.
நேரிலும், தொலைபேசி மூலமும் எனக்கு ஆதரவு தெரிவித்த அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ஏதோ பயத்தில் உள்ளதுபோல தெரிகிறது. எதற்காக அவர்கள் பயப்படுகிறார்கள் என்பது தெரியவில்லை.
அவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு விரைவில் என்னை வந்து சந்திப்பார்கள். அணிகள் இணைப்புக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் ஏன் பேசினார் என்று தெரியவில்லை. விரைவில் அந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண்போம்.
முதல்வர் பதவிக்கான போட்டியில் நான் இல்லை. என் கவனம் முழுவதும் கட்சியை ஒருங்கிணைத்து நல்லாட்சியை அளிக்க வேண்டும் என்பதில் உள்ளது. முதல்வராக வேண்டும் என நான் விரும்பியிருந்தால், பழனிசாமியை சசிகலா முதல்வராக்கியபோதே அந்தப் பதவியை அடைந்திருக்க முடியும்.
முதல்வர் இருக்கை ஜெயலலிதா என்ற சிங்கம் அமர்ந்திருந்தது. அந்த இடத்தை நிரப்ப யாராலும் முடியாது. நாங்கள் அவரை வழிபடத்தான் முடியும். கட்சியிலும், ஆட்சியிலும் அவரது இடத்தை யாராலும் நிரப்ப முடியாது.
அதிமுகவுக்கு இரட்டை இலை சின்னம் விரைவில் கிடைக்கும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. சின்னத்தை திரும்பப் பெற சுகேஷ் சந்திரசேகர் எனக்குத் தேவையில்லை. கட்சியை நான் வழிநடத்த வேண்டும் என்றும் ஜெயலலிதாவின் குறிக்கோள்களை நிறைவேற்ற வேண்டும் என்றும் பெரும்பாலான நிர்வாகிகள் நினைக்கின்றனர். சிலர் அந்த கருத்துக்கு எதிராக உள்ளனர். அதற்கான காரணம் அவர்களுக்குத்தான் தெரியும். அவர்கள் மீது எனக்கு எந்த கோபமும் இல்லை.
இரு அணிகளும் விரைவில் இணையும் என எம்.நடராஜன் தெரிவித்துள்ளார். ஆனால், அவருக்கு என்ன நடந்து கொண்டிருக்கிறது என்ற அடிப்படையான விஷயங்கள் தெரியவில்லை. தற்போது எனக்கு எதிராக கருத்து தெரிவிக்கும் அமைச்சர்கள் எல்லோரும் ஜெயலலிதாவாலோ எங்கள் குடும்பத்தாராலோ அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்.
ஜெயலலிதாவின் மரணத்தில் எந்த சந்தேகமோ, சதித் திட்டமோ இல்லை. ஒரு சிறந்த தலைவரின் மரணத்தை அரசியலாக்கக் கூடாது. அவரது உடல்நிலையை கருத்தில் கொண்டு, தொற்று ஏற்படாமல் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரை பார்க்க யாரையும் மருத்துவர்கள் அனுமதிக்கவில்லை.
ஜெயலலிதா விரும்பமாட்டார் என்பதால்தான் மருத்துவமனையில் இருந்தபோது அவரது புகைப்படங்கள் வெளியிடப்படவில்லை. ஆனால், அவரது புகைப்படங்கள் சிலவற்றை சசிகலா என்னிடம் அளித்தார்.
அவரை மருத்துவமனை உடையில், பலவீனமான நிலையில் பார்க்கும்போது மிகவும் வேதனை ஏற்பட்டது. அந்தப் புகைப்படங்கள் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின்போது கிடைத்தன. ஆனால், அதை எந்தவிதத்திலும் வெளியிட விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.