திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.
மன்னார்குடியில் இருந்து பெருகவாழ்ந்தான் செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, கழுகத்தூர். இங்கு சவுந்தரநாயகி உடனாய ஜடாயுபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலின் பிரகாரத்தில் 12 ராசிகளின் சின்னம் பொறிக்கப்பட்ட ராஜ சிம்மாசனத்தில் தட்சிணாமூர்த்தி அருள்பாலிக்கிறார். இங்கு ஒரு ராசியைக் கூறி அர்ச்சனை செய்தால், 12 ராசிகளுக்கும் அர்ச்சனை செய்த பலன் கிடைக்கும்.
பொதுவாக சிவன் கோவில்களில் வீற்றிருக்கும் தட்சிணாமூர்த்தி, சிவன் சன்னிதியின் கோஷ்டத்தில் தெற்கு திசை நோக்கி அருள்பாலிப்பார். ஆனால், தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகிலுள்ள திருநறையூர் (நாச்சியார்கோயில்) சித்தநாதேஸ்வரர் கோவிலில், தட்சிணாமூர்த்தியை மேற்கு நோக்கிய கோலத்தில் தரிசிக்கலாம். இத்தலத்தில் மூலவர் சித்தநாதேஸ்வரரும், மேற்கு நோக்கியே இருப்பது கூடுதல் சிறப்பு. இங்குள்ள தட்சிணாமூர்த்திக்கு எதிரே நவக்கிரக சன்னிதி இருக்கிறது. ஜாதக ரீதியாக தோஷம் உள்ளவர்கள் தட்சிணாமூர்த்திக்கும், நவக்கிரக சன்னிதியில் உள்ள குரு பகவானுக்கும் பூஜை செய்து வழிபடுகிறார்கள்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து மயிலாடுதுறை செல்லும் சாலையில் உள்ளது, திருவிடைமருதூர். இங்கு மகாலிங்க சுவாமி கோவில் இருக்கிறது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி ராஜ அலங்காரத்தில் சிம்மாசனத்தில் மனைவியுடன் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார்.
திருவையாறு ஐயாறப்பன் கோவிலில் கபாலமும் சூலமும் ஏந்தியவராக தட்சிணாமூர்த்தி காட்சியளிக்கிறார். இவர் காலடியின் கீழ் ஆமை போன்ற உருவம் காணப்படுகிறது. இதுபோன்ற அமைப்பை வேறெந்த கோவிலிலும் காணமுடியாது.
தஞ்சாவூர் மாவட்டம் திருவைகாவூர் திருத்தலத்தில் வில்வவனேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் வேறு எங்கும் இல்லாத வகையில், கையில் கோலேந்திய தட்சிணாமூர்த்தி நின்ற கோலத்தில் காட்சி தருகிறார்.
தஞ்சாவூர் மாவட்டம் மேலைத்திருப்பூந்துருத்தியில் புஷ்பவனேஸ்வரர் கோவில் உள்ளது. இங்குள்ள தட்சிணாமூர்த்தி, கையில் வீணையுடன் ‘வீணா தட்சிணாமூர்த்தி’யாக அருள்பாலிக்கிறார்.