பலரும் அறியாத கூல் கேப்டன் தோனி நிகழ்த்திய மாபெரும் சாதனைகள்!
இந்திய ஒரு நாள் கிரிக்கெட் அணியின் தலைவர் மகேந்திர சிங் தோனி இன்று தனது 35வது பிறந்த தினத்தை கொண்டாடி வருகிறார்.
இந்தியாவின் 27 ஆண்டு உலக கிண்ண தாகத்தை கடந்த 2011ம் ஆண்டு தோனி தீர்த்து வைத்தார் என்பது உலகறிந்ததே.
கூல் கேப்டன் தோனி பல சாதனைகளை நிகழ்த்தியுள்ளார் எனினும் இன்று அவர் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நிகழ்த்திய சில முக்கிய சாதனைகளை பார்ப்போம்:
- ஐசிசியின் முக்கிய மூன்று நிகழ்வுகளிலும் இந்திய அணியை வழிநடத்தி சென்ற ஒரே அணித்தலைவர் தோனி தான். 2007ம் ஆண்டு நடந்த முதல் 20 ஒவர் உலக கிண்ணத்தை தோனி தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது. 2011ம் ஆண்டு சொந்த மண்ணில் 50 ஒவர் உலக கிண்ணத்தை கைப்பற்றியது. தொடர்ந்து 2013ம் ஆண்டு சாம்பியன்ஸ் கிண்ணத்தையும் வென்று தந்தார்.
- தோனி தலைமையிலான இந்திய டெஸ்ட் அணி தரவரிசைப்பட்டியில் தொடர்ந்து எட்டு மாதங்களாக முதல் இடத்தில் இருந்தது.
- அவுஸ்திரேலிய அணித்தலைவர்கள் அல்லாது ஒரு அணியை 100க்கும் மேற்பட்ட போட்டிகளில் வழிநடத்தி சென்ற ஒரே அணித்தலைவர் தோனி தான். மேலும். அவுஸ்திரேலியா அணித்தலைவர்கள் ரிக்கி பாண்டிங், ஆலன் பார்டரை தொடர்ந்து மூன்றாவது அணித்தலைவராக ஒரு அணியை 100க்கும் மேற்பட்ட போட்டியில் வெற்றிப்பெற செய்தவர் தோனி.
- 8000 ஓட்டங்களை மிக விரைவில் கடந்த நான்காவது வீரர் தோனி.
- 2013ம் ஆண்டு சாம்பியன் கிண்ணத்தை வென்றதை தொடர்ந்து. ஐசிசியின் மூன்று முக்கிய கிண்ணங்களை கைப்பற்றிய ஒரே இந்திய அணித்தலைவராக தோனி திகழ்கிறார்.
- 2011ம் ஆண்டு நவம்பர் 1ம் திகதி, இந்தியத் தரைப்படை, இந்திய முன்னாள் அணித்தலைவர் கபில் தேவ்வை தொடர்ந்து தோனிக்கு கெளரவ பதவியான லெப்டினென்ட் கர்னல் பதவியை வழங்கி கௌரவித்தது.
- 2008 மற்றும் 2009ம் ஆண்டின் ஐசிசி சிறந்த வீரர் பதக்கத்தை தோனி தட்டிச்சென்றார்.
- 2011, 2012, 2013 என தொடர்ந்து மூன்று ஆண்டுகளும் தோனி தலைமையிலான இந்திய அணி, ஆண்டின் சிறந்த அணியாக ஐசிசியால் தெரிவு செய்யப்பட்டது.
- கடந்த 2007ம் ஆண்டு இந்திய அரசாங்கம் தோனிக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதை வழங்கி கௌரவித்தது.
- 2011ம் ஆண்டின் சிறந்த இந்திய விளையாட்டு வீரருக்கான பதக்கத்தை CNN-IBN தோனிக்கு வழங்கி கௌரவித்தது.