பாகிஸ்தான் அணிக்கு எதிராக செப்டம்பர் 12 தொடங்கும் 3 டி20 சர்வதேசப் போட்டிகளில் விளையாட டுபிளெசிஸ் தலைமை உலக லெவன் அணி லாகூருக்கு பலத்த பாதுகாப்புகளுக்கிடையே வந்தது.
இதுவரை இல்லாத அளவுக்கு பெரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை அல்லமா இக்பால் பன்னாட்டு விமான நிலையத்திலிருந்து 5 நட்சத்திர விடுதிக்கு உலக அணி வீரர்கள் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டன, வரும் வழியெல்லாம் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது, அனைத்துப் பக்கங்களிலிருந்தும் அணி வீரர்கள் பேருந்து வரும் பாதையை எட்ட முடியாமல் போக்குவரத்து மூடப்பட்டிருந்தது.
விமான நிலையத்தில் ஊடகவியலாளர்களுடன் சந்திப்பு இல்லை என்று ஏற்கெனவே பாகிஸ்தான் கிரிக்கெட் சங்கம் அறிவித்திருந்தது.
கடந்த மார்ச் 2009-ல் இலங்கை அணியினர் மீது தீவிரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டதையடுத்து பாகிஸ்தானில் விளையாட அணிகள் அச்சம் தெரிவித்து தவிர்த்து வந்தன.
மே, 2015-ல் ஜிம்பாப்வே அணி பாகிஸ்தானில் விளையாடிய போது கூட ஐசிசி ஆட்ட நடுவர்கள், களநடுவர்களை அனுப்ப மறுத்து விட்டது.
ஆனால் பாகிஸ்தானுக்கு மீண்டும் சர்வதேச கிரிக்கெட் திரும்பும் நோக்கத்துடன் நடத்தப்படும் இந்த உலக லெவன், பாகிஸ்தான் இடையேயான் போட்டி ஐசிசி ஆதரவுடன் நடைபெறுகிறது.
நாளை, செப்.12-ம் தேதி முதல் டி20 போட்டி நடைபெறுகிறது. 13 மற்றும் 15-ம் தேதிகளில் மற்ற 2 டி20 போட்டிகள் நடைபெறுகின்றன. போட்டிகள் லாகூர் கடாஃபி மைதானத்தில் நடைபெறுகிறது.