பற்றி எரியும் பெங்களூரு! தமிழகத்தை சேர்ந்த 65 தனியார் பேருந்துகள் எரிப்பு!
தண்ணீர் ஓர் எரிபொருள் அல்ல என்கிறது விஞ்ஞானம். ஆனால், இப்போது தண்ணீர் எரிபொருளாய் மாறியிருக்கிறது. ஒரு ஹைட்ரஜன் அணுவும், ஓர் ஆக்சிஜன் அணுவும் பிணையும்போது உருவாவதுதான் நீர் என்கிறது வேதியியல். ஆனால், இந்த அணுக்களின் பிணைவு, ஒரு பிளவையே உணடாக்கி இருக்கிறது. காவிரி பிரச்னையில் திங்கள்கிழமை மாலையில் மட்டும் தமிழக பதிவு எண் கொண்ட 50 தனியார் பேருந்துகள் கொளுத்தப்பட்டுள்ளன.
வீடியோவை இங்கே அழுத்தி பார்க்கவும்…
கொளுத்தப்பட்ட தனியார் பேருந்துகள்!
பெங்களூருவிலிருந்து 17 கி.மீ தொலைவில், கெங்கேரியில் உள்ள தனியார் பேருந்துகள் பணிமனையில் 50-க்கும் மேற்பட்ட தமிழக பதிவு எண் கொண்ட பேருந்துகள் கன்னட இனவெறியர்களால் கொளுத்தப்பட்டு இருக்கின்றன. கொளுத்தியவர்கள், ‘‘நாங்கள் எங்கள் ரத்தத்தைக் கொடுப்போம்… ஆனால், காவிரியை அல்ல…’’ என்று கோஷமிட்டுக் கொண்டே கொளுத்தியதாக அந்தப் பகுதியில் இருந்த செய்தியாளர்கள் கூறுகிறார்கள்.
இது மட்டுமல்லாமல் திங்கள்கிழமை முழுவதும் கர்நாடக மாநிலத்தில், மாண்டியா, மைசூரு, சித்திரதுர்கா, தர்வாத் மாவட்டங்களில் உள்ள பல்வேறு இடங்களில் தமிழக பதிவு எண் கொண்ட வாகனங்கள் தாக்கப்பட்டு இருக்கின்றன. அதுபோல, தமிழர்களின் கடைகளும் அதிக அளவில் தாக்கப்பட்டு இருக்கின்றன. குறிப்பாக மாண்டியா பகுதியில்தான் அதிக அளவில் வன்முறை வெடித்து இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. பண்டவபுரா பகுதியில் தமிழர்களின் வீடுகளும், கடைகளும் தாக்கப்பட்டு இருக்கின்றன. சாம்ராஜ் நகரிலும் தமிழர்களின் கடைகள் குறிவைத்து தாக்கப்பட்டு இருக்கின்றன.
‘‘வன்முறை அதிக அளவில் வெடித்துள்ளதால், பெங்களூரு பகுதியில் 144 தடை உத்தரவு போடப்பட்டு உள்ளது. ஆனபோதிலும், அங்கு தமிழர்களுக்கு எதிரான வன்முறை தொடர்ந்த வண்ணம்தான் இருக்கிறது’’ என்கிறார்கள் பெங்களூருவில் வசிக்கும் தமிழர்கள்.
மாலை 4.30 முதல் 8.10 வரை:
4.30: சத்தியமங்கலம் நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த 20-க்கும் மேற்பட்ட லாரிகள் தும்காரா பகுதியில் தாக்கப்பட்டு இருக்கின்றன.5.30: கலவரத்தில் ஈடுபட்ட 200 பேர் கைதுசெய்யப்பட்டு இருப்பதாகக் கன்னட உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா தெரிவித்தார்.5.40: கே.ஆர் மார்க்கெட், கலாசிபால்யா மற்றும் ஜே.சி சாலையில் உள்ள பல கடைகள் அச்சுறுத்தலுக்கு அஞ்சி அடைக்கப்பட்டன.7.00: தமிழக பதிவு எண் கொண்ட 50 தனியார் பேருந்துகள் கொளுத்தப்பட்டன.7.45: கர்நாடக முதலவர் நாளை காலை 11 மணிக்கு அவசர அமைச்சரவைக் கூட்டத்தைக் கூட்டி உள்ளார்.
8.10: அமெரிக்கா அட்வைசரி, பெங்களூருவில் உள்ள தங்கள் நாட்டுக் குடிமக்களைப் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்தி உள்ளது.