பற்கள் முழுவதையும் அகற்றிக்கொண்டு 500 பச்சை குத்திக்கொண்ட நபர்
இந்தியாவைச் சேர்ந்த முதியவர் ஒருவர் கின்னஸ் சாதனை படைப்பதற்காக தனது உடலில் 366 கொடிகளை பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
மொத்தமாக 500 இற்கும் மேற்பட்ட உருவங்கள் இவரின் உடலில் பச்சை குத்தப்பட்டுள்ளன.
74 வயதான பிரகாஷ் ரிஷி எனும் இவர், 20 சாதனைகளைப் படைத்ததாக கூறுகிறார். தற்போது அவர் “கின்னஷ் ரிஷி” என்றே அழைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
1942 ஆம் ஆண்டு புதுடில்லியில் பிறந்த பிரகாஷ் ரிஷி, 1990 ஆம் ஆண்டு முதல் தடவையாக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றார்.
அவர் தனது இரு நண்பர்களுடன் மோட்டார் ஸ்கூட்டர் ஒன்றில் 1001 மணித்தியாலங்கள் பயணம் செய்தமை கின்னஸ் உலக சாதனையாக பதிவு செய்யப்பட்டது.
பின்னர் புதுடில்லியிலிருந்து அமெரிக்காவின் சான் பிரான்ஸிஸ்கோ நகருக்கு பீட்ஸா விநியோகித்தமை, ஒரு போத்தல் தக்காளி சோஸை 4 நிமிடங்களுக்குள் உட்கொண்டமை என பல சாதனைகளை அவர் படைத்தார்.
வாயில் அதிகம் உறிஞ்சும் குழாய்களை (ஸ்ட்ரோ) வைத்து சாதனை படைப்பதற்காக இவர் தனது பற்கள் முழுவதையும் கழற்றிக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
மகாத்மா காந்தி, 2 ஆம் எலிஸபெத் அரசி உட்பட பல பிரமுகர்களின் உருவங்களையும் இவர் பச்சை குத்திக்கொண்டுள்ளார்.
கின்னஸ் ரிஷியின் மனைவி பிம்லா, உலகின் மிகச்சிறிய உயில் எழுதியமைக்காக கின்னஸ் சாதனை நூலில் இடம்பெற்றமை குறிப்பிடத்கதக்து.
1991 ஆம் ஆண்டு அனைத்தும் மகனுக்கே (All to son)என்பதே இந்த உயிலாகும்