தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட சிறுத்தை குட்டி சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தாய்லாந்து தலைநகர் பாங்காங்கிலிருந்து சென்னை வந்த தாய் ஏா்லைன்ஸ் விமானத்தில் ஒரு மாத சிறுத்தை குட்டியைக் கூடைக்குள் வைத்துக் கடத்தி வந்த முகைதீன் என்ற பயணி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
முகைதீன் உடைமையில் இருந்து வித்தியாசமான சப்தம் வந்ததையடுத்து அவரிடம் சுங்கத் துறை நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது அவர் வைத்திருந்த கூடையில் இருந்து ஒரு மாதமே ஆன பெண் சிறுத்தை குட்டி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை விமானத்தில் கொண்டு வருவதற்கு உரியச் சான்றிதழ் ஏதும் இல்லாததால் அதை அங்கேயே அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும் அவரிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டதற்கு, இது உயர் ரக நாய்க் குட்டி என்று அவர் விளக்கம் கொடுத்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பின்னர், சிறுத்தை குட்டி கடத்தப்பட்டது குறித்து சென்னையில் உள்ள வன உயிரின காப்பக குற்றப்பிரிவுக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. தகவலறிந்து அங்குச் சென்ற அதிகாரிகள், 1.1 கிலோ எடையுடைய சிறுத்தைக் குட்டியை மீட்டனர். முதலில் வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிறுத்தை குட்டியை வைத்துப் பராமரிக்க திட்டமிட்ட வனத்துறையினர், பின்னர் தாய்லாந்து நாட்டிற்கே திருப்பி அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது
சிறுத்தை குட்டியை கடத்தி வந்த சென்னையை சேர்ந்த முகைதீனிடம் உயிரின காப்பக குற்றப்பிரிவினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.