பாதுக்க – அங்கம்பிட்டிய பிரதேசத்தில் உள்ள ஹோட்டல் ஒன்றுக்குள் நுழைந்த இருவர் ஹோட்டலை நடத்திச் சென்ற தம்பதியினரை தாக்கி ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவம் வியாழக்கிழமை (18) இரவு 10.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாதுக்க – அங்கம்பிட்டிய பிரதேசத்திலுள்ள ஹோட்டலுக்குள் நுழைந்த இருவர், இரவு உணவுக்காக கொத்து ரொட்டியை வழங்குமாறு கூறிவிட்டு, சிறிது நேரம் கழித்து ‘கொத்து ரொட்டி வேண்டாம்; பரோட்டா வேண்டும்’ என கூறியுள்ளனர்.
ஹோட்டலில் பரோட்டா ரொட்டி தீர்ந்துபோனதால் ஹோட்டல் உரிமையாளர் அவர்களிடம் பரோட்டா ரொட்டி முடிந்துவிட்டதாக கூறியுள்ளார்.
இதனையடுத்து குறித்த இருவரும் ஹோட்டல் உரிமையாளர்களான தம்பதியினரை தாக்கிவிட்டு ஹோட்டலையும் சேதப்படுத்தியுள்ளனர்.
அதனால் ஹோட்டல் உரிமையாளர்களான தம்பதியினர் தங்கள் குழந்தைகளை அழைத்துக்கொண்டு உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அங்கிருந்து உடனடியாக வெளியேறி பாதுக்க பொலிஸ் நிலையத்தில் முறையிட்டுள்ளனர்.
அதன் பின்னர், சந்தேக நபர்களில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மற்றைய சந்தேக நபர் ஹோட்டல் உரிமையாளர் தன்னை தாக்கியதாக கூறி வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, தமக்கு ஏற்பட்ட அநீதிக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து தங்களுக்கு ஏற்பட்ட இழப்புகளுக்கு நஷ்ட ஈட்டை பெற்றுத்தருமாறு பொலிஸாரிடம் ஹோட்டல் உரிமையாளர்களான தம்பதியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.