கடந்த 28 வருடங்களாக மூடப்பட்டிருந்த பருத்தித்துறை – காங்கேசந்துறை இடையிலான ஏ.பீ. 21 வீதி நேற்று முதல் பொது மக்களின் பயன்பாட்டுக்கு திறந்துவிடப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் இந்த வீதி நேற்று திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த 1990 ஜுன் 20 ஆம் திகதி முதல் யாழ். பலாலி இராணுவ அதிஉயர் பாதுகாப்பு வலயம் அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து பாதுகாப்புக் காரணங்களுக்காக இந்த பொது மக்கள் பாதை மூடப்பட்டது.
இந்த பாதை திறக்கப்பட்டதனால் பருத்தித்துறை மக்கள் காங்கேசந்துரை செல்லும் போது 50 கிலோமீற்றர் சுற்றுப் பாதையில் செல்லவிருந்த சிரமம் இல்லாமல் செய்யப்படுவதாக ஜனாதிபதி நேற்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் தெரிவித்தார்.
இந்த பாதை திறப்பின் பின்னர் 3.5 கிலோமீற்றர் தூரம் பயணித்து பருத்தித்துறை மக்கள் காங்கேசந்துரையை அடைந்து கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.