பிரபல அலைபேசி நிறுவனத்தின் வாராந்தச் சீட்டிழுப்பில் பரிசுத் தொகை வீழ்ந்துள்ளதாகக் கூறி ஒரு குடும்பத் திடம் மோசடியாக 42,000 ரூபா பணம் அறவிடப்பட்ட சம்பவம் ஒன்று மிருசுவில் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பணம் கட்டம் கட்டமாக மீள்நிரப்பு அட்டைமூலம் அறவிடப்பட்டுள்ளது. நான்கு கட்டங்களாக பணம் அனுப்பியும் பரிசுத் தொகை கிடைக்காததால் சம்பந்தப்பட்டவர்கள் கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் இதுதொடர்பாக முறைப்பாடு செய்துள்ளனர்.
இதுதொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
மிருசுவில் விடத்தற்பளையைச் சேர்ந்த குடும்பத்துக்கு அலைபேசி மூலம் அழைப்பு வந்தது. தொடர்புகொண்டவர் குறிப்பிட்ட தொலைபேசி நிறுவனம் ஒன்றின் பெயரைக் கூறி அதன் வாராந்த சீட்டிழுப்பில் பரிசுத் தொகை கிடைத் துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளர்.
பரிசுத் தொகையை அனுப்புவதற்கு 7 ஆயிரம் ரூபாவும், 50 ரூபாவுக்கு மீள்நிரப்பு அட்டையும் குறித்த இலக்கத்துக்கு அனுப்பி வைக்குமாறு அறிவித்துள்ளார்
பெருந்தொகை கிடைக்கவுள்ள மகிழ்ச்சியில் 7, 050 ரூபாவை நபரின் அலைபேசிக்கு வரவிட்டுள்ளனர். இவ்வாறு கட்டம் கட்டமாக 42000 ரூபாவரை வரவிட்டுள்ளனர். பரிசுத்தொகை கிட்டவில்லை. அவரது அலைபேசி தொடர்பும் நிறுத்தப்பட்டது.
சந்தேகம் கொண்ட குடும்பத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர். விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
இவ்வாறான மோசடிகள் தொடர்பில் அலைபேசி நிறுவனங்கள் வாடிக்கையாளர்களை அடிக்கடி அறிவுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.