நேற்று சனிக்கிழமை பரிசில் மிக வித்தியாசமான கவனிக்கத்தக்க நிகழ்வு ஒன்று இடம்பெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் சோம்பி போன்று வேடமணிந்து நகரை ஆக்கிரமித்தனர்.
திரைப்படங்கள் மற்றும் சித்திரக்கதைகளில் வரும் கற்பனை கதாப்பாத்திரம் தான் இந்த சோம்பி. மூளை இறந்த பின்னரும் உடல் உயிருடன் இருக்கும் என உருவாக்கப்பட்ட இந்த கதாப்பாத்திரம் உலகம் முழுவது பல கோடி மக்களை ஈர்த்துள்ளது. இந்நிலையில், இந்த சோம்பி பரிஸ் மக்களையும் ஈர்த்துள்ளது. நேற்று சனிக்கிழமை நண்பகலில், நூற்றுக்கும் மேற்பட்ட ஆண்கள் பெண்கள் அனைவரும் சோம்பி போன்று வேடமணிந்து Place de la Republique ஐ முற்றுகையிட்டனர். இந்த நிகழ்வை ஏற்பாடு செய்தவர்கள், இதனை
“marche des zombies” என குறிப்பிடுகிறார்கள். மேலும், இவர்களை காண பல நூறு மக்கள் அப்பகுதியில் கூடினார்கள்.
உடம்பில் இரத்தம் சொட்ட சொட்ட ஒருவரும், தலையில் இரும்பு கம்பி குத்தியுள்ளது போல ஒருவரும், உடல் கருகி எரிந்தது போல ஒருவரும் என பல வித்தியாசமான, தத்ரூபமான வேடங்களில் அசத்தினார்கள். குழந்தைகள் காண தடை விதிக்கப்பட்டிருந்த போதிலும், பல புகைப்படக்கலைஞர்கள் இந்த நிகழ்வை படம்பிடித்துள்ளனர். பொதுமக்கள் பலர் இதனை சமூக வலைத்தளங்களிலும் பதிவேற்றியுள்ளனர்.