மன்னார் சதொச மனித புதைகுழியை மீண்டும் அகழ்வதற்கு வவுனியா மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மன்னார் நீதிமன்றக் கட்டளையில் மன்னார் சதொச மனித புதைகுழி அகழப்பட்டு பல மனித எலும்புக்கூடுகள், மனித எச்சங்கள் தோண்டி எடுக்கப்பட்டு வந்த சூழ்நிலையில் காணாமல்போனோர் மற்றும் சட்டத்தரணிகள் வழக்கில் ஆஜராக முடியாது என மன்னார் நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்ததையடுத்து மூன்று பாதிக்கப்பட்ட நபர்கள் வவுனியா மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் குறித்த மீளாய்வு மனு இன்று விளக்கத்திற்கு வந்தது. விசேட அரச சட்டவாதி, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி ரத்னவேல் தலைமையிலான சட்டத்தரணி குழாம் (OMB), காணாமல்போனோர் தரப்பிற்கான சட்டத்தரணி ஆகியோர் வாதப்பிரதி வாதங்களில் இன்று ஈடுபட்டனர்.
புதைகுழி அகழ்வில் ஈடுபட்ட வைத்திய கலாநிதி ராஜபக்ச மன்றில் ஆஜராகி இருந்தார். விளக்கம் முடிவடைந்ததும் உடனடியாகவே நீதிபதி இளஞ்செழியன் தீர்ப்பை அறிவித்தார்.
மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பு ரத்துச் செய்யப்படுகிறது எனவும், புதைகுழி அகழ்வுப் பணியை உடன் ஆரம்பிக்குமாறும் மன்னார் நீதிபதிக்கு இளஞ்செழியன் கட்டளை பிறப்பித்தார்.
காணாமல்போனோரின் உறவினர்கள் மற்றும் அவர்களது சட்டத்தரணிகள் புதைகுழி விசாரணையில் பங்கு கொள்ள நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]