பரபரப்பான டெஸ்ட்: ஆட்டம் காட்டிய வங்கதேச அணிக்கு அதிர்ச்சி கொடுத்த இங்கிலாந்து
இங்கிலாந்து- வங்கதேசம் அணிகள் மோதிய முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங்கில் நடந்தது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 293 ஓட்டங்களும், வங்கதேசம் முதல் இன்னிங்சில் 248 ஓட்டங்களும் எடுத்தன.
இதன் பின்னர் 2வது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 240 ஓட்டங்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இதனால் வங்கதேச அணிக்கு 286 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
இந்நிலையில் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேச அணி சிறப்பாக ஆடி வெற்றியின் விளிம்பிற்கு வந்தது.
நேற்றைய 4வது நாள் ஆட்டத்தின் முடிவில் அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 253 ஓட்டங்கள் எடுத்திருந்தது. சபீர் ரஹ்மான் 59 ஓட்டங்களுடனும், தஜூல் இஸ்லாம் 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
இன்று கடைசி நாள் ஆட்டம் நடந்தது. வங்கதேச அணி வெற்றி பெற மேலும் 33 ஓட்டங்கள் தேவை, அதே சமயம் கைவசம் 2 விக்கெட் மட்டுமே இருந்தது.
இந்நிலையில் வங்கதேசம் இலக்கை எட்டி வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை பெறுமா? என்று ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர்.
ஆனால் அந்த அணி எஞ்சிய 2 விக்கெட்டையும் விரைவாக இழந்த 263 ஓட்டங்களில் சுருண்டது.
இதனால் பரபரப்பான இந்த டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து 22 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.
இந்த வெற்றி மூலம் 2 டெஸ்ட் கொண்ட இந்த தொடரில் இங்கிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.