அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையின் முன்னெடுப்புக்கள் , பயங்கரவாத தடைச்சட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள திருத்தங்கள் உட்பட இலங்கை கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ள கவனத்தில் கொள்ளப்படக் கூடிய காரணிகள் தொடர்பில் பிரான்ஸ் புரிதலுடன் செயற்படும் என்று எதிர்பார்ப்பதாக வெளியுறவுகள் அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.
காணாமல் போனார் அலுவலகம் , இழப்பீட்டு அலுவலகம் , தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் உள்ளிட்ட தேசிய பொறிமுறைகள் குறித்தும் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் விளக்கமளித்துள்ளார்.
பிரான்ஸ் செனட் சபையின் பிரான்ஸ் – இலங்கை நட்புறவு குழுவின் தலைவர் மற்றும் அதன் உறுப்பினர்களுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இலங்கைக்கு சார்பாக பிரான்ஸ் செயற்படுவதற்கு அமைச்சர் பீரிஸ் இதன் போது நன்றி தெரிவித்தார். சுற்றுலாத்துறை , அந்நிய செலாவணி வீழ்ச்சியடைந்தமையின் காரணமாக இலங்கை எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் தொடர்பில் அறிக்கையொன்றையும் அமைச்சர் இதன் போது முன்வைத்தார்.
நாடு தற்போது படிப்படியாக வழமைக்கு திரும்பிக் கொண்டிருப்பதாகவும் பொருளாதார நெருக்கடியிலிருந்து எதிர்காலத்தில் மீள முடியும் என்றும் அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டினார்.
அபிவிருத்தி மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் இலங்கையின் முன்னெடுப்புக்கள் குறித்தும் அமைச்சர் பீரிஸ் பிரான்ஸ் செனட்சபைக்கு விளக்கமளித்தார். காணாமல் போனார் அலுவலகம் , இழப்பீட்டு அலுவலகம் , தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம், நிலையான அபிவிருத்தி இலக்குகள் சபை, மனித உரிமைகள் ஆணைக்குழு உள்ளிட்ட தேசிய பொறிமுறைகளின் அமைச்சர் இதன் போது கருத்து வெளியிட்டார்.
உயர் நீதிமன்ற நீதியரசர்கள் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு அதன் இரண்டாவது அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாகவும் , அரசியலமைப்பு திருத்தங்கள் தொடர்பில் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட குழுவின் நடவடிக்கைகள் இறுதி கட்டத்தை அடைந்துள்ளதாகவும் , அவர்களது அறிக்கை விரைவில் கிடைக்கப் பெறும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
42 ஆண்டுகள் பழமையான பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்பில் தற்போது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள, மார்ச் முதலாம் வாரத்தில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள, அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள யோசனைகள் தொடர்பிலும் அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
மனித உரிமைகள் பேரவையின் 49 ஆவது கூட்டத்தொடரில் பங்குபற்றுவதற்காக தான் ஜெனீவா செல்லவுள்ளதாகவும் , இலங்கை கடந்த காலங்களில் முன்னெடுத்துள்ள கவனத்தில் கொள்ளப்படக் கூடிய காரணிகள் தொடர்பில் பிரான்ஸ் புரிதலுடன் செயற்படும் என்று எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பொருளாதாரம், துறைமுக நகர் உள்ளிட்ட முதலீட்டு செயற்பாடுகள் , நாட்டின் சுகாதார மற்றும் கல்வி முறைமைகள் மற்றும் வெளிநாட்டு கொள்கைகள் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]