பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருகின்றோம். அவ்வாறிருக்கையில் இப்புதிய சட்டம் வேண்டாம் என்றுகூறி எதிர்ப்பு வெளியிட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் நிலையேற்படும் என்று நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தினால் அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தின் உள்ளடக்கம் தொடர்பில் பாரிய எதிர்ப்பலை தோற்றம்பெற்றுள்ள நிலையில், அச்சட்டமூலத்தைப் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதைத் தாமதிக்கப்போவதாகக் கடந்த வாரம் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவித்துள்ளார்.
இவ்வாறானதொரு பின்னணியில், பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலத்தில் அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்குத் தயாராக இருக்கின்றீர்களா? என்று எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதுகுறித்து மேலும் குறிப்பிட்ட அவர், ‘பயங்கரவாத எதிர்ப்புச்சட்டமூலம் தொடர்பில் குறைகூறுகின்ற அனைவரும் அதன் ஒருசில கூறுகளை மாத்திரமே சுட்டிக்காட்டிப்பேசுகின்றனர். மாறாக அந்த சரத்துக்களின் முழுமையான அர்த்தத்தைப் புரிந்துகொண்டதன் பின்னர், அதில் என்ன குறைபாடு இருக்கின்றது என்பது பற்றி யாரும் கூறவில்லை’ என்று விசனம் வெளியிட்டார்.
அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டத்துக்குப் பதிலாகவே பயங்கரவாத எதிர்ப்புச்சட்டத்தைக் கொண்டுவருகின்றோம். அவ்வாறிருக்கையில் இப்புதிய சட்டம் வேண்டாம் என்றுகூறி எதிர்ப்பு வெளியிட்டால், ஏற்கனவே நடைமுறையில் உள்ள பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்ந்து அமுலில் இருக்கும் என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
இந்நிலையில் ‘இப்புதிய சட்டமூலத்தை எதிர்ப்பவர்கள் நீதிமன்றத்தை நாடலாம். அதனைத்தொடர்ந்து அவசியமான திருத்தங்களை மேற்கொள்வதற்கு நாம் தயாராக இருக்கின்றோம். எனவே நாம் எதனையும் அரசியலமைப்புக்கு முரணானவகையில் செய்யமாட்டோம்’ எனவும் நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ உறுதியளித்தார்.