பயங்கரவாத தடை சட்டத்தை இரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்திய கையெழுத்துப்போராட்டம் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படும்.
இது குறித்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினரும், இந்த நடவடிக்கைகளுக்கான ஒருங்கிணைப்பாளருமான எம்.எ.சுமந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதானது,
1979 ஆம் ஆண்டு ஆறு மாதங்களுக்கு தற்காலிக ஏற்பாடுகள் சட்டமாக கொண்டுவரப்பட்ட ஆனால் 40 ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்தும் அமுலில் உள்ள கொடூரமான பயங்கரவாத தடுப்பு சட்டத்தை ரத்து செய்யக் கோரி நாடளாவிய ரீதியில் கையொப்பமிடும் பிரசார நடவடிக்கை ஒன்றினை நாம் ஆரம்பித்துள்ளோம்.
அன்றைய அரசாங்கத்திற்கு எதிரான அதிருப்தியை நசுக்குவதற்கு இது பயன்படுத்தப்பட்டதை இக் காலகட்டத்தில் நாங்கள் கண்டோம். இது கடந்த காலங்களில் தொடர்ந்து செய்யப்பட்டது போல இன்றும் தொடர்கின்றது.
இந்த சட்டம் நீக்கப்பட்டு அதற்கு பதிலாக சர்வதேச மனித உரிமைகள் தர நிலைமைகள் மற்றும் விதிமுறைகளுக்கு இணங்க புதிய சட்டம் இயற்றப்படும் என்று அரசாங்கம் கடந்த காலங்களில் பல உறுதிமொழிகளை வழங்கியது.
எவ்வாறாயினும் அண்மையில் பாராளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட திருத்தச்சட்டமூலமானது அத்தகைய உத்தரவாதங்களுக்கு ஏற்றதாக இல்லாதிருப்பதோடு பயங்கரவாத தடை சட்டத்தில் உள்ள எந்தவொரு கடுமையான விதிகளையும் நிவர்த்தி செய்யத் தவறியுள்ளது.
இந்த நாடு தழுவிய பிரசாரம் பயங்கரவாத தடை சட்டத்தை ரத்து செய்வதாக அரசாங்கம் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வலியுறுத்துவதாகவும். கொழும்பில் இக் கையெழுத்து பிரசாரம் 2022 பெப்ரவரி 15 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை 11 மணி (இன்று) முதல் பிற்பகல் 1 மணி வரை கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக நடத்தப்படும்.
தயவாக எம்முடன் சேர்ந்து இப் பயங்கரவாத தடுப்பு சட்டத்தினை ரத்து செய்வதற்கான மனுவில் கையெழுத்திடுங்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]