பயங்கரவாதம் முறியடிக்கப்பட்டு விட்டதென கருதுபவர்கள் முட்டாள்களாகவே இருக்க முடியும். ஆகையால் மக்கள் எப்போதும் அவதானத்துடன் இருப்பதே நல்லதென நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து நேற்று (திங்கட்கிழமை) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே சரத் பொன்சேகா இதனை குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறியுள்ளதாவது,
“நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்போம் என கூறியவர்கள்தான் தற்போது ஜனாதிபதி முறையே சிறந்ததென கூறி வருகின்றனர்.
மேலும் ஜனாதிபதி, ஒவ்வொரு விதமான கனவுகளை கண்டு, அதற்கேற்றவாறு செயற்படுகின்றார்.
அதாவது, ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்றமையினால் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான காய்ச்சல் வருகிறது.
இதேவேளை நாட்டில் பயங்கரவாத செயற்பாடுகளுக்கு காரணமானவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு விட்டார்கள். இனி ஒருபோதும் அத்தகையதொரு அசம்பாவிதம் நிகழாது என பிரதமர் கூறியுள்ளார்.
ஆனால், இந்தியா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் பயங்கரவாத தாக்குதல் முடிவுக்கு வரவில்லையெனவும் மீண்டும் தாக்குதல் இடம்பெறுவதற்கு வாய்ப்புள்ளதெனவும் கூறி வருகின்றது.
அந்தவகையில் நானும் பிரச்சினை ஆரம்பித்தவுடனே கூறினேன் இந்த பயங்கரவாதத்தை முழுமையாக செயழிலக்க செய்வதற்கு இன்னும் இரண்டு வருடங்களாவது தேவைப்படும் என்றேன்.
ஆனால் இங்குள்ள அரசியல் தலைமைகளுக்கு அது புரியவில்லை. எதுஎவ்வாறாயினும் நாட்டின் பாதுகாப்புக்கு ஜனாதிபதியும் பிரதமருமே பொறுப்பாகும்” என சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.