பயங்கரவாதம், சர்வதேச அளவில் பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும், அதனை ஒழிக்க பிரதமர் மோடியும், சீன அதிபர் ஜிங்பிங்கும் உறுதி பூண்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவு செயலர் விஜய் கோக்லே கூறியுள்ளார்.
உறுதி
இரு நாடுகளுக்கு இடையிலான மாநாடு தொடர்பாக வெளியுறவு செயலர் விஜய் கோக்லே கூறியதாவது: பயங்கரவாதம் காரணமாக அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என்பதை பிரதமர் மோடியும், அதிபர் ஜி ஜிங்பிங்கும் ஒப்பு கொண்டனர். இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளதுடன், அனைத்து வடிவிலும் பயங்கரவாதத்தை ஒழிக்க இரு தலைவர்களும் உறுதி பூண்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு எதிராக நடவடிக்கைளுக்கு ஒத்துழைப்பு வழங்கவும் உறுதி பூண்டுள்ளனர்.
அறிவுரை
இந்தியா – சீனா எல்லையில் அமைதி நிலவ வேண்டும் என்பதை ஒப்பு கொண்டனர். இரு நாடுகளுக்கு இடையில் தொலை தொடர்பு, நம்பிக்கை மற்றும் புரிந்துணர்லை ஏற்படுத்த வேண்டும் என இரு நாட்டு ராணுவத்திற்கும் இரு தலைவர்களும் வழிமுறைகளை வழங்குவார்கள். எல்லையில் நிலவும் சூழ்நிலையை சமாளிக்கவும், கையாளவும் தகவல்கள் பரிமாறி கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும். பருவநிலை மாற்றம் குறித்தும், இதனை சமாளிக்க சர்வதேச அளவில் இணைந்து செயல்படுவது குறித்தும் ஆலோசனை நடந்தது. இவ்வாறு அவர் கூறினார்.