பம்பலப்பிட்டியில் இயங்கிய பதிவு செய்யப்படாத கல்வி நிறுவனம் ஒன்றின் செயற்பாட்டுக்கு உடந்தையாக இருந்தார்கள் எனக் கூறப்படும் மேலும் ஐவரை பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 23, 25 மற்றும் 26 வயதுடையவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இவர்கள் புவக்பிட்டிய, பல்லேவெல, தெமட்டகொட, பொலன்னறுவை மற்றும் மத்துகம பிரதேசங்களில் வசிப்பவர்களாவர்.
இந்தச் சந்தேக நபர்கள் புதன்கிழமை (06) புதுக்கடை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, குறித்த போலி கல்வி நிறுவனத்தின் பணிப்பாளராக செயற்பட்டார் எனக் கூறப்படும் கிரியுல்ல நாரங்கமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியும் கைது செய்யப்பட்டு, 500,000 ரூபா சரீரப் பிணையில் புதுக்கடை நீதிமன்றத்தினால் விடுவிக்கப்பட்டார்.
சட்டபூர்வ அனுமதியின்றி கல்விச் சேவைகளை வழங்கிய பின்னர் போலி டிப்ளோமா சான்றிதழ்களையும் இந்த போலி நிறுவனம் வழங்கியிருந்தது.
மேலும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்கு தேவையான டிப்ளோமாக்கள் மற்றும் உயர் டிப்ளோமாக்கள் போன்ற கல்வித் தகைமைகளை வழங்குவதாக சமூக இணையங்களில் விளம்பரம் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.