நானுஓயா காவற்துறை பிரிவுக்குட்பட்ட நானுஓயா பகுதியில் நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட ஒரு தொகை உர மூட்டைகளை அதிக விலைக்கு விற்பனை செய்வதற்காக மறைத்து வைக்கபட்டிருந்த போது நுவரெலியா பிரதேச நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் மற்றும் நானுஓயா காவற்துறையினர் இணைந்து மீட்டுள்ளனர்.
நானுஓயா பகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களில் அதிக விலைக்கு இரசாயன உரம் விற்பனை செய்வதாக நுவரெலியா நுகவோர் அதிகார சபைக்கு கிடைத்த முறைப்பாட்டுக்கு அமைய வர்த்தக நிலையங்களையும் வர்த்தகர்களின் வீடுகளையும் சோதனை செய்த போது வீட்டில் மறைத்து வைத்திருந்த நிலையில் குறித்த உர மூட்டைகள் மீட்கப்பட்டுள்ளன.
இதன் போது நிவாரண விலையில் விற்பனை செய்வதற்காக பெற்றுக்கொண்ட 129 உர மூட்டைகள் மீட்கப்பட்டு சீல் வைக்கப்பட்டதாக நுவரெலியா நுகவோர் சபையின் அதிகாரியொருவர் தெரிவித்தார். நிவாரண விலையில் 1,500 ரூபாவுக்கு விற்பனை செய்வதற்காக பெற்றுக்கொடுக்கப்பட்ட இந்த உர மூட்டைகள் 3,000 ரூபா தொடக்கம் 4,000 ரூபா வரை விற்பனை செய்வதாக இவர்கள் மேற்கொண்ட ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளன.
சம்பவம் தொடர்பாக உரிமையாளருக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாகவும் விவசாயிகளுக்கு இந்த உரத்தினை 1,500 ரூபாவுக்கே பெற்றுக்கொடுக்க நீதி மன்றத்தில் கோர உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களான இராசயன உரமின்றி விவசாயிகள் பல்வேறு போராட்டங்களையும் செய்து வரும் நிலையில் பல ஏக்கர் பயிர் நிலங்கள் அழிந்து போகும் நிலையில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவது கவலையளிப்பதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான சம்பவங்கள் குறித்த அரசாங்கம் இதனை விட கூடிய அக்கறை செலுத்தி விவசாயிகளுக்கு எவ்வாறாயினும் உரத்தினை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என இவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.