“பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதவி விலகவேண்டிய அவசியமில்லை” என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
அத்தனகல்ல பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர், மத்திய வங்கி பிணைமுறி மோசடி விவகாரம் தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
“பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்ட குற்றவாளிகளைக் கண்டறிவதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் நடவடிக்கை எடுத்துள்ளனர். பிரதமரால் நியமிக்கப்பட்ட அதிகாரியொருவர் ஊழல் செய்திருந்தால் பிரதமர் எப்படி குற்றவாளியாக முடியும். அவர்களுடன் இணைந்து பிரதமர் கொள்ளையடிக்கவில்லை. எனினும், பொறுப்புக்கூறவேண்டிய நிலைமை அவருக்கு ஏற்படக்கூடும். நம்பிக்கையில்லாப் பிரேரணை தொடர்பில் கூட்டு எதிரணியினரே பேசுகின்றனர். அதற்கான தேவைப்பாடு எழாது” என்றும் அவர் தெரிவித்தார்.
அதேவேளை, சர்வதேசத்தின் தேவைக்கேற்பவே இலங்கையில் ஆட்சி நடக்கின்றது என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளையும் சந்திரிகா அம்மையார் அடியோடு நிராகரித்துள்ளார்.