சமகாலத்தில் இலங்கை அரசியலில் ஏற்பட்டுள்ள குழப்ப நிலை காரணமாக, தமது நாட்டு பிரஜைகளின் பாதுகாப்பு தொடர்பில் பிரித்தானியா கரிசனை வெளியிட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்று வரும் திடீர் அரசியல் மாற்றம் காரணமாக அவதானமாக இருக்குமாறும், எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் அல்லது விசேட அரசியல் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டாம் எனவும், இலங்கைக்கு செல்லும் போது குறுகிய கால விசா பெற்றுக்கொள்ளுமாறும் பிரித்தானிய பிரஜைகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.முழுமையான பயண மற்றும் மருத்துவ காப்பீடு பெற்றுக் கொள்ளுமாறு பிரித்தானிய சுற்றுலா பயணிகளிடம் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது இலங்கை – இங்கிலாந்து கிரிக்கெட் தொடரைப் பார்க்க இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளுக்காக விசேட வழிகாட்டி ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.இலங்கையின் நிலைமை தொடர்பில் தொடர்ந்து ஆராய்ந்து சுற்றுலா பயணிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்கவுள்ளதாக பிரித்தானியா விடுத்துள்ள விசேட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ஷ பிரதமராக பதவியேற்றுள்ள நிலையில், அரசியல் ஸ்திரத்தன்மை ஏற்பட்டுள்ளதுடன், நாட்டில் எந்த நேரத்திலும் எதுவும் நடக்கலாம் என்ற தோற்றப்பாடு உருவாக்கியுள்ளது.இந்நிலையில் தமது நாட்டு பிரஜைகளுக்கு பிரித்தானியாவின் எச்சரிக்கை வெளியாகியுள்ளது.