’சங்கர சிவாய வென்று சிங்கவாகனத்தில் ஏறி
செய வீரபத்ரன் வாறார் காண்மினே’
தென்மயிலை , கட்டுவன் வீரபத்திரப்பெருமான் வருகையைப் பாடும்
வீரபத்திரர் வசந்தன் நாடக பாடல் அடிகள் அவை.
மூன்று தசாப்தங்களுக்குபின் மீண்டும் காளிகா சமேத வீரபத்திரப் பெருமான் அழகுத்தரிசனம் எங்களுக்காகின்றது.புதிய எழிலுடன் நிமிர்ந்துள்ள ஆலயத்தின் மகா கும்பாபிஷேகம் இன்று (2022.06.13) காலை 6.05 மணிக்கு நிகழ திருவருள் கூடியுள்ளது.
எங்கள் புலத்து சைவ ஆலயப்பண்பாட்டின் மூலவரான சிவபாதசுந்தரக் குருக்களின் மைந்தர ,கட்டுவன்-கனடா முத்துமாரி அம்மன் ஆலய குருவான ஆறுமுகக்குருக்கள் அவர்கள் தலைமையில் கிரியைகள் நடக்கின்றன. தேசப்பரபிலும் புலம் பெயர் தேசங்களிலும் இருந்து ஆலய மீள் எழுச்சிக்காய் உழைத்த ஊரின் உறவுகள் ஒன்று கூடி ஆன்மீக அனுபவத்தில் திழைத்திருக்கிறார்கள்.கடந்த முப்பது ஆண்டுகளுக்கும் மேலான இடம்பெயர்வுகளும் புலம்பெயர்வுகளும் தந்த துயரெலாம் கரைந்திட நாளையின் நம்பிக்கை நாளாக குல தெய்வத்தின் இந் நாளைக்கொண்டாடுகின்றார்கள்.
காலனித்துவ காலத்து எங்கள் பண்பாட்டின் சமய இருப்பைக் காத்து நின்ற காவல் தெய்வமென எங்கள் சமய வரலாறு போற்றும் இவ்வழிபாட்டு மரபின் மீட்சி எங்கள் சமூகவாழ்வின் மீட்சிக்கான குறிகாட்டி என்றால் மிகையில்லை.
“ஆளுடைத் தனி ஆதியை நீத்தொரு
வேள்வி முற்ற விரும்பிய தக்கனோர்
நீள் சிரத்தை நிலத்திடை வீட்டிய
வாள் படைத்த மதலையைப் போற்றுவாம்”
பேராசிரியர் நாகலிங்கம் சண்முகலிங்கன்
தலைவர் , தேவஸ்தான பரிபாலன சபை