பெற்றோல் பங்குகளில் மிக நீண்ட வரிசைகளில் மக்களும் வாகனங்களும் நிறைந்திருக்க, பசியில் மயங்கி விழுந்து உயிரிழக்கும் கொடுமைகளும் எரிபொருளுக்காக சண்டையிட்டு கொலையில் முடிந்த துயரங்களும் என்று இன்றைய இலங்கையின் பொருளாதார நெருக்கடி உச்சம் காண்கிறது. மிகவும் கொடிய கட்டத்தை அடைந்திருக்கும் இலங்கை வரும் நாட்களில் இன்னும் மோசமானால் நிலமை எப்படி இருக்கும் என்பதை நினைத்துப் பார்க்கவே பேரச்சமாக இருக்கிறது.
கொரோனா பேரிடர் உலகம் முழுவதையும் கடுமையான பொருளதார நெருக்கடிக்குள் தள்ளியிருந்தது. ஆனால் பொதுமுடக்கங்களின் முடிவுக்குப் பிறகு உலக நாடுகள் தம் பழைய இடத்தை அடைந்துவிட்டன. ஆனால் இலங்கை கொரோனா பேரிடருடன் சரியத் துவங்கிய நிலையில் அதற்குப் பிந்தைய காலத்தில் இன்னும் மோசமான பொருளாதார நிலையை எட்டியிருக்கிறது.
2009இல் இலங்கையில் ஈழத் தமிழர்கள் மீதான இனவழிப்புப் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது. அதில் பாதுகாப்பு செயலாளராக பதவி வகித்த கோத்தபாய ராஜபக்சே, போர் வெற்றியை தேர்தல் அரசியலில் பயன்படுத்தி அதிபர் பதவியை கடந்த 2019இல் கைப்பற்றினார்.
தனது ஆட்சியில் செயற்கை உரங்களுக்குத் தடை என்றும் அவற்றை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்போவதில்லை என்றும் முன்னெடுத்த முதல் அறிவிப்பும் நடவடிக்கையுமே இன்றைய அத்தனை பொருளாதார வீழ்ச்சிக்கும் அடிப்படையாகவும் துவக்கமாகவும் அமைந்துவிட்டது.
இதனால் விவசாயம் பெரும் வீழ்ச்சியை சந்தித்ததுடன் எழுபது ரூபா விற்ற அரிசி தற்போது 2010 ரூபாவை தொட்டுள்ளது. 98ரூபாவாக விற்கப்பட்ட பெற்றோல் இப்போது 254 ரூபாவாக அதிகரித்துள்ளது. 300 ரூபா விற்ற பால்மா இப்போது 800 ரூபா அதிகரித்துள்ளத. அது மாத்திரமின்றி பல்வேறு பொருள்களையும் அடுத்தடுத்து தடை விதித்தபோது நாட்டில் பொருட்களுக்குத் தட்டுப்பாடும் விலை உயர்வும் நெருப்பாக உயர்ந்துள்ளது. பொருட்களுக்கான கட்டுப்பாட்டு விலை நீக்கம் இலங்கையின் அத்தனை சந்தைகளையும் கள்ளச் சந்தையாக மாற்றியுள்ளது.
டொலர் இருப்பு இன்மை காரணமாக அத்தியாவசியாப் பொருட்களை இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு திண்டாடி வருகின்றது. இலங்கை வரும் கப்பல்கள் பொருட்களுடன் பல நாட்கள் காத்திருப்பதுடன் அதற்கும் சேர்ந்து மேலும் அதிக தொகையை செலுத்த அந்த தொகையை விலை உயர்வாக மக்களின் தலைமையில் மீண்டும் அரசு சுமத்துகிறது.
ஒரு பொருளின் விலை ஒவ்வொரு நாளும் இருபது ரூபாவாவும் முப்பது ரூபாவாலும் சடுதியாக அதிரிக்கப்பட்டு வருகின்றது. அரிசி, பருப்பு, சீனி, பால்மா முதலிய அடிப்படை உணவுப் பொருட்கள் எல்லாம் மிக அதிகமாக விலை உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் கடைகளில் இந்தப் பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடும் நிலவுகிறது.
இந்த நிலையில் இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு எதிராக சிங்கள மக்கள் கடும் ஆவேசத்துடன் காணப்படுகின்றனர். பெற்றோல் பங்குகளில் நிற்கும் மக்கள் கோத்தாபாயவுக்கு எதிராக கடுமையாக கொந்தளிப்பதுடன் அவர் ஆட்சிப் பதவியை விட்டு உடன் விலக வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர்.
சிங்கள மக்கள் நாட்டை விட்டு வெளியேறுகின்ற நிலையில் உள்ளனர். இலங்கை குடியல்வு குடிவரவு திணைக்களங்களின் முன்னால் நாட்டை விட்டு வெளியேறக் குவிகின்றனர். ஈழத் தமிழர்கள் தமிழ்நாட்டுக்காவது அகதியாக தப்பிச் சென்றுவிடலாமா என்று தவிக்கின்ற நிலையில் பொருளாதார நெருக்கடியால் முதல் குடும்பம் அகதியாக தமிழ்நாடு வந்துவிட்டார்கள்.
கடந்த வாரம் இலங்கை தலைநகர் கொழும்புவில் அதிபர் கோத்தபாயவின் மாளிகையை முற்றுகையிட்டு மிகப் பெரிய போராட்டம் நடைபெற்றது. அதில் பல லட்சம் பேர் கலந்துகொண்டு அதிபர் மாளிகையை முற்றுகையிட்டு அதிபருக்கு சவப்பெட்டியை வீசியெறிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பிரபாகரன் வடக்கு கிழக்கை தன் கட்டுப்பாட்டில் வைத்திருந்த போது அந்த மக்கள் கூட இப்படி பஞ்சத்தையும் தட்டுப்பாட்டையும் எதிர்கொள்ளவில்லை என்றும் இராணுவத்தால் சூழப்பட்ட வடக்கு கிழக்கில் புலிகள் மக்களுக்கு பொருட்களை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார்கள் என்றும் கோத்தபாய பிரகாகரனிடம் ஆட்சியையும் நிர்வாகத்தையும் குறித்து கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சிங்கள மக்கள் பகிரங்கமாக சொல்லத் துவங்கியுள்ளனர்.
சிங்கள அரசு ஒரு காலத்தில் தமிழ் மக்களின் மீது பொருளாதார நெருக்கடியை ஒரு யுத்தமாக செய்தது. தமிழர்களுக்கு இவையெல்லாம் புதிதல்ல. நாயை சுடுவதைப் போல தமிழர்களை கொன்றேன் என்றும் நான் சிங்கள மக்களின் ஜனாதிபதி என்றும் இனவழிப்புப் போரின் யுத்த வெற்றியைப் பேசிய கோத்தபாய ராஜபக்சவை சிங்கள மக்களே இன்றைக்கு தூக்கி எறியும் நிலை வந்துவிட்டது. கோத்தபாய ராஜபக்ச தமிழர்களுக்கு எதிராக செய்த இனப்படுகொலை அவலங்களுக்கு இனி சிங்கள மக்களே தீர்ப்பளிப்பார்கள்.
தீபச்செல்வன்
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]