பசுவின் சிறுநீரை மனிதர்கள் அருந்துவது பாதுகாப்பானதல்ல எனவும் அதில் ஆபத்தான பக்டீரியாக்கள் உள்ளதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இந்தியாவின் முன்னிலை விலங்கு ஆராய்ச்சி நிறுவனமான, இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் (IVRI) நடத்திய ஆராய்ச்சியின் மூலம் இது தெரியவந்துள்ளது.
கோமியம் எனவும் பசுவின் சிறுநீர் குறிப்பிடப்படுகிறது. வட இந்தியாவிலும் இந்தியாவின் ஏனைய பல பகுதிகளிலும் மக்கள் சிலர் பசுவின் சிறுநீரை அருந்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். சில நோய்களை பசுவின் சிறுநீர் குணப்படுத்துவதாகவும் சிலர் கூறுகின்றனர். கொரோனா பரவல் உச்சத்திலிருந்துபோது பசுவின் சிறுநீர் அருந்தும் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.
இந்நிலையில், பசுக்கள், காளைகள் மற்றும் எருமை மாடுகளின் சிறுநீரை அருந்துவது மனிதர்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் என உத்தரபிரதேச மாநிலம் பெரெலியில் உள்ள இந்திய கால்நடை மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் சார்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் தெரிவந்துள்ளது.
பசு மற்றும் காளைகளின் சிறுநீரில் நடத்தப்பட்ட ஆய்வில் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கக்கூடிய 14 வகையான பக்டீரியாக்கள் அவற்றில் உள்ளன என்பது தெரியவந்துள்ளது.
வயிற்றுத் தொற்றுக்களுடன் தொடர்புடைய Escherichia coli பக்டீரியாவும் இவற்றில் அடங்கும் எனத் தெரவிக்கப்பட்டுள்ளது.
இந்த பக்டீரியாக்கள் மனித உடலுக்கு தீங்கு விளைவித்து குடல், வயிறு சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பது தெரியவந்துள்ளது. எந்த வகையிலும் சிறுநீரை மனிதர்கள் அருந்துவதற்குப் பரிந்துரைக்கப்படவில்லை என்று அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்திய கால்நடை மருத்துவ நிறுவகத்தின் தொற்றுநோயியல் பிரிவின் தலைவரான போஜ் ராஜ் சிங் மற்றும் அவரின் 3 கலாநிதி (பிஎச்டி) பட்டப்படிப்பு மாணவர்கள் இணைந்து 2022 ஜூன் முதல் 2022 நவம்பர் வரையான காலத்தில் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
மனிதர்கள் மற்றம் எருமைகளின் மாதிரிகளும் இந்த ஆய்வுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.
ஆரோக்கியமான நபர்களிம் பெறப்பட்ட கணிசமான அளவு மாதிரிகளில் நோய்களை ஏற்படுத்தக்கூடி பக்டீரியாக்கள் காணப்பட்டதாக டைம்ஸ் ஒவ் இண்டியாவிடம் போஜ் ராஜ் சிங் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, வடிகட்டப்பட்ட, பசுவின் சிறுநீர் தொடர்பான ஆராய்ச்சிகள் தொடர்வதாகவும் அவர் கூறியுள்ளார்.