பங்களாதேஷ் உணவகத் தாக்குதல்: கைது செய்யப்பட்ட கனேடிய பல்கலைக்கழக மாணவன் விடுதலை!
பங்களாதேஷின் தலைநகர் டாக்காவின் உணவகம் ஒன்றின் மீது கடந்த ஜூலை மாதம் இடம்பெற்ற தீவிரவாதத் தாக்குதலுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருந்த ரொரன்றோ பல்கலைக்கழகத்தின் மாணவன் விடுதலை செய்யப்பட்டுள்ளான்.
22 வயதான தஹ்மிட் ஹசிப் கான் என்ற குறித்த மாணவன் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) விடுதலை செய்யப்பட்டதாக, பங்களாதேஷ் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.ஜூலை 1 ஆம் திகதி இடம்பெற்ற இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் கனடா நிரந்தர வதிவுரிமையுள்ள குறித்த மாணவன் கடந்த ஓகஸ்ட் மாதம் குற்றச்சாட்டுகள் இன்றி கைது செய்யப்பட்டிருந்தான்.
குறித்த சம்பவத்தில் 20 பொதுமக்கள் உயிரிழந்ததுடன், அவ்வுணவகத்தில் இருந்த ஏனையவர்களை தீவிரவாதிகள் பணயக்கைதிகளாக சிறைப்பிடித்திருந்தனர். இத்தாக்குதலில் உயிரிழந்தவர்களில் அனேகர் வெளிநாட்டினர்.
இவ்விடயம் தொடர்பில், கானின் குடும்பத்தினர் தெரிவிக்கையில், குறித்த தாக்குதலில் பாதிக்கப்பட்ட ஒரு நபர் தான் ஹசிப் கான். அவருக்கும் அத்தாக்குதலுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை- என குறிப்பிட்ட்னர்.