ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்றுவரும் 7ஆவது இருபது 20 உலகக் கிண்ண அத்தியாயத்தில் பங்குபற்றிவரும் தென் ஆபிரிக்காவும் பங்களாதேஷும் அபு தாபியில் இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள குழு 2க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மோதவுள்ளன.
இக் குழுவில் முதலிரண்டு இடங்களுக்குள் வருவதன் மூலம் அரை இறுதி வாய்ப்பை பெற முடியும் என்பதை அறிந்துள்ள தென் ஆபிரிக்கா இன்றைய போட்டியில் பங்களாதேஷை வெற்றிகொள்ளும் குறிக்கோளுடன் களம் இறங்கவுள்ளது.
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தனது ஆரம்பப் போட்டியில் தோல்வி அடைந்த தென் ஆபிரிக்கா, அதன் பின்னர் மேற்கிந்தியத் தீவுகள், இலங்கை ஆகிய அணிகளின் கடும் சவால்களுக்கு மத்தியில் வெற்றிபெற்று அணிகள் நிலையில் பாகிஸ்தான், அவுஸ்திரேலியா ஆகியவற்றைத் தொடர்ந்து 3 ஆவது இடத்தில் இருக்கின்றது.
இன்றைய போட்டியில் வெற்றிபெற்றால் தென் ஆபிரிக்காவின் அரை இறுதி வாய்ப்பு அதிகரிக்கும்.
தென் ஆபிரிக்கா தனது போட்டிகளில் எதிர்பார்த்தளவு பிரகாசிக்காதபோதிலும் மிகவும் அவசியமான தருணங்களில் ஆட்டத்தில் திருப்பு முனைளை ஏற்படுத்தி வெற்றிபெற்றுள்ளது.
அத்துடன் எத்தகைய அழுத்தங்களையும் நெருக்கடிகளையும் சமாளிக்கவல்ல அணியாக தென் ஆபிரிக்கா திகழ்கின்றது.
உதாரணத்துக்கு இலங்கையுடனான போட்டியின் கடைசி 2 ஓவர்களில் வெற்றிக்கு மேலும் 25 ஓட்டங்கள் தேவைப்பட்டபோது டேவிட் மில்லர், கெகிசோ ரபாடா ஆகியோரின் அதிரடி ஆட்டங்கள் அந்த இலக்கை அடைய உதவியிருந்தன.
மறுபுறத்தில் மிக முக்கிய சகலதுறை வீரரும் அனுபவசாலியுமான ஷக்கிப் அல் ஹசன், உபாதை காரணமாக இருபது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியிலிருந்து விலகிக்கொண்டுள்ளமை பங்களாதேஷுக்கு பேரிடியாக அமையவுள்ளது.
முதல் சுற்றில் ஸ்கொட்லாந்திடம் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்த பங்களாதேஷ், மற்றைய 2 போட்டிகளில் பப்புவா நியூ கினி, ஓமான் ஆகிய நாடுகளை வெற்றிகொண்டு சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது.
ஆனால் சுப்பர் 12 சுற்றில் விளையாடிய 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து அரை இறுதி வாய்ப்பை பெரும்பாலும் இழந்துள்ளது.
எனவே இந்தப் போட்டியில் அதிசயம் நிகழ்ந்தாலன்றி பங்களாதேஷ் இறுதிச் சுற்றுக்கு செல்வது நினைத்துப்பார்க்க முடியாத ஒன்றாகும்.
அணிகள்
தென் ஆபிரிக்கா: டெம்பா பவுமா (தலைவர்), குவின்டன் டி கொக், ரீஸா ஹெண்ட்றிக்ஸ், ஏய்டன் மார்க்ராம், ரசி வென் டேர் டுசென், டேவிட் மில்லர், ட்வெய்ன் ப்ரிட்டோரியஸ், கெகிசோ ரபாடா, கேஷவ் மஹாராஜ், அன்ரிச் நோக்யா, தப்ரெய்ஸ் ஷம்சி.
பங்களாதேஷ்: மொஹம்மத் நய்ம், லிட்டன் தாஸ், முஷ்பிக்குர் ரஹிம், மஹ்முதுல்லாஹ் (தலைவர்), அபிப் ஹொசெய்ன், சௌம்யா சர்க்கார், மஹேதி ஹசன், ஷொரிபுல் இஸ்லாம், ஷமிம் ஹொசெய்ன் அல்லது நசும் அஹ்மத், தஸ்கின் அஹ்மத், முஷ்தாபிஸுர் ரஹ்மான்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]