பங்களாதேஷுக்கு எதிராக ஹெமில்டன், சிடொன் பார்க் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை (22) நடைபெற்ற போட்டியில் 110 ஓட்டங்களால் வெற்றியீட்டிய இந்தியா, மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறுதி வாய்ப்பை சற்று அதிகரித்துக்கொண்டுள்ளது.
யஸ்திகா பாட்டியா குவித்த அரைச் சதம், ஸ்நேஹ் ரானா மற்றும் பூஜா வஸ்த்ராக்கர் ஆகியோரின் சகலதுறை ஆட்டங்கள் இந்தியாவின் வெற்றியை இலகுபடுத்தின.
இந்த வெற்றியுடன் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் 3ஆவது வெற்றியை ஈட்டிய இந்தியா, அணிகள் நிலையில் 6 புள்ளிகளுடன் நிகர ஓட்ட வேக அடிப்படையில் 3ஆம் இடத்தில் இருக்கின்றது.
இப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த இந்தியா 50 ஒவர்களில் 7 விக்கெட்களை இழந்து 229 ஓட்டங்களைப் பெற்றது.
ஸ்ம்ரித்தி மந்தானா (30 ஓட்டங்கள்), ஷபாலி வெர்மா (42) ஆகிய இருவரும் 15 ஓவர்களில் 74 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். ஆனால் அதே மொத்த எண்ணிக்கையில் இவர்கள் இருவரும் அணித் தலைவி மிதாலி ராஜும் (0) இழந்தபோது இந்தியா ஆட்டம் கண்டது.
தொடர்ந்து ஹார்மன்ப்ரீத் கோர் (14) நான்காவதாக ஆட்டமிழந்தபோது இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 104 ஓட்டங்களாக இருந்தது.
எனினும் யஸ்திகா பாட்டியா (50), ரிச்சா கோஷ் (26) ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களைப் பகிர்ந்து மொத்த எண்ணிக்கைக்கு வலு சேர்த்தனர்.
தொடர்ந்து பூஜா வஸ்த்ராக்கர் (30 ஆ.இ.), ஸ்நேஹ் ரானா (27) ஆகிய இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடிய இந்தியாவின் மொத்த எண்ணிக்கை 200 ஓட்டங்களைக் கடக்க உதவினர்.
பங்களாதேஷ் பந்துவீச்சில் ரிட்டு மோனி 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் நஹிதா அக்தர் 42 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
230 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 40.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 119 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது.
பங்களாதேஷின் 5ஆவது விக்கெட் 18ஆவது ஓவரில் வீழ்ந்தபோது அதன் மொத்த எண்ணிக்கை 35 ஓட்டங்களாக இருந்தது.
இந் நிலையில் ஜோடி சேர்ந்த லதா மொண்டால் (24), சல்மா காட்டுன் (32) ஆகிய இருவரும் சிறப்பாக துடுப்பெடுத்தாடி பங்களாதேஷுக்கு உற்சாகம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் இருவரும் 6ஆவது விக்கெட்டில் 40 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது சல்மா காட்டுன் ஆட்டமிழக்க, பங்களாதேஷின் எதிர்பார்ப்பு தகர்ந்தது.
இவர்கள் இருவரை விட முர்ஷிதா காட்டுன் (19), ரிட்டு மொனி (16), ஜஹனாரா அலாம் (11 ஆ.இ) ஆகிய மூவரே 10 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர்.
இந்திய பந்துவீச்சில் ஸ்நேஹ் ரானா 30 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஜூலான் கோஸ்வாமி 19 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் பூஜா வஸ்தராக்கர் 26 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
இந்தியா தனது கடைசி போட்டியில் தென் ஆபிரிக்காவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது. அப் போட்டியே மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் கடைசி லீக் ஆட்டமாக அமைகின்றது.