சுற்றுலா இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று நடைபெறவுள்ளது.
மிர்பூரில் உள்ள ஷெர்-இ பங்களா மைதானத்தில் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு ஆரம்பமாகும் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ், இலங்கையை வீழ்த்தி தொடரை கைப்பற்றும் எதிர்பார்ப்புடன் களமிறங்கும்.
ஆட்டத்திற்கு சில மணி நேரங்களுக்கு முன்னர் கொவிட்-19 அச்சுறுத்தலால் பாதிக்கப்பட்ட மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 99 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. எனினும் 5 ஆவது விக்கெட்டுக்காக ஜோடி சேர்ந்த அனுபவமிக்க வீரர்களான முஷ்பிகுர் ரஹ்மான் மற்றும் மஹ்முதுல்லா ஆகியோரின் இணைப்பாட்டம் 109 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தது.
இறுதியில் பங்களாதேஷ் 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட் இழப்புக்கு 257 ஓட்டங்களை குவித்தனர்.
அதன் பின்னர் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி பங்களாதேஷின் பந்து வீச்சில் திக்குமுக்காடிப் போனது. வனிந்து ஹசரங்க மாத்திரம் 74 ஓட்டங்களை அணிக்காக பெற்றுக் கொடுத்தாலும், ஏனைய வீரர்கள் சொப்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
பந்து வீச்சில் மெய்டி ஹசான் 4 விக்கெட்டுகளையும், முஸ்தாபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இறுதியில் இலங்கை அணி 224 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழக்க, 33 ஓட்டங்களினால் வெற்றி பெற்றது பங்களாதேஷ்.
இந் நிலையில் 2023 ஐ.சி.சி கிரிக்கெட் உலகக் கிண்ண சூப்பர் லீக் அட்டவணையில் இலங்கை நான்கு போட்டிகளில் பூஜ்ஜிய வெற்றிகளுடன் பட்டியலில் காணப்படுகிறது.
வரவிருக்கும் இரண்டு ஒருநாள் போட்டிகளின் வெற்றி தொடரை கைவசப்படுத்துவதற்கான வாய்ப்பையும், 2023 உலகக் கிண்ண சூப்பர் லீக் அட்டவணையில் எளிய பயணத்திற்கு தேவையான 20 புள்ளிகளைப் பெறுவதற்கான வாய்ப்பையும் வழங்கும்.