இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் சட்டாக்ரோம் விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் ஐசிசி உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கை சிறு தடுமாற்றத்தை எதிர்கொண்டுள்ளது.
முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷைவிட 68 ஓட்டங்கள் பின்னிலையில் இருந்த இலங்கை, அதன் இரண்டாவது இன்னிங்ஸில் நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் 2 விக்கெட்களை இழந்து 39 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
இதற்கு அமைய 2 ஆவது இன்னிங்ஸில் 8 விக்கெட்கள் மீதமிருக்க 29 ஓட்டங்களால இலங்கை தொடர்ந்தும் பின்னிலையில் இருக்கிறது.
இதன் காரணமாக இலங்கை அணி இன்று பெரும் அழுத்தத்தை எதிர்கொள்ளவுள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் ஆரம்ப வீரர் ஓஷத பெர்னாண்டோ 19 ஓட்டங்களுடனும் இராக்காப்பாளன் லசித் எம்புல்தெனிய 2 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அணித் தலைவர் திமுத் கருணாரட்ன 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காதுள்ளார்.
போட்டியின் கடைசி நாளான இன்று வியாழக்கிழமை (19), இலங்கை துடுப்பாட்ட வீரர்கள் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டிவரும்.
அத்துடன், கடைசி நாளன்று முதலாவது ஆட்ட நேர பகுதி இரண்டு அணிகளுக்கும் முக்கியமானதாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
விக்கெட்களைக் தக்கவைத்துக்கொள்ள இலங்கையும் விக்கெட்களை வீழ்த்த பங்களாதேஷும் முயற்சிக்கவுள்ளதால் ஆட்டத்தில் பரபரப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போட்டியின் நான்காம் நாளான நேற்று (18) காலை தனது முதல் இன்னிங்ஸை 3 விக்கெட் இழப்புக்கு 318 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த பங்ளாதேஷ், 465 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது கடைசி விக்கெட்டை இழந்தது.
முஷ்பிக்குர் ரஹிமும் லிட்டன் தாஸும் 3ஆவது விக்கெட்டில் 165 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது லிட்டன் தாஸ் 88 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.
உபாதையிலிருந்து மீண்டுவந்து தனது துடுப்பாட்டத்தை 133 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த தமிம் இக்பால் இன்று எதிர்கொண்ட முதல் பந்திலேயே ஆட்டமிழந்தார்.
இதனிடையே திறமையாகத் துடுப்பெடுத்தாடிய முஷ்பிக்குர் ரஹிம் டெஸ்ட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களைப் பூர்த்திசெய்தார்.
இதன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 5,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்த முதலாவது பங்களாதேஷ் வீரர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார்.
தனது 81 ஆவது டெஸ்ட் போட்டியில் விளையாடும் முஷ்பிக்குர் 62ஆவது ஓட்டத்தைப் பெற்றபோது 5,000 ஓட்டங்களைப் பூர்த்தி செய்தார்.
அத்துடன் தனது 8 ஆவது டெஸ்ட் சதத்தைப் பூர்த்தி செய்து 105 ஓட்டங்கள் பெற்றிருந்தபோது ஆட்டமிழந்தார்.
அவர்களை விட ஷக்கிப் அல் ஹசன் 26 ஓட்டங்களையும் தய்ஜுல் இஸ்லாம் 20 ஓட்டங்களையும் பெற்றனர்.
மூளை அதிர்ச்சிக்குள்ளாகி ஓய்வுபெற்ற விஷ்வா பெர்னாண்டோவுக்கு பதிலாக விளையாடிய கசுன் ராஜித்த 60 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களைக் கைப்பற்றி இலங்கை பந்துவீச்சில் பிரகாசித்தார்.
அவரைவிட அசித்த பெர்னாண்டோ 72 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
இலங்கை அதன் முதலாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 397 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.