பங்களாதேஷ் சென்றுள்ள இலங்கை கிரிக்கெட் அணியினர் தங்களுக்கிடையே இரண்டு அணிகளை பிரித்து விளையாடிய பயிற்சிப் போட்டியில் நிரோஷன் திக்வெல்ல, குசல் மெண்டிஸ், அஷேன் பண்டார, வனிந்து ஹசரங்க, இசுரு உதான, சாமிக்க கருணாரட்ண ஆகியோர் சிறந்த ஆற்றல்களை வெளிப்படுத்தினர்.
18 பேர் அடங்கிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர்கள் தலா 9 பேர் அடங்கிய இரண்டு அணிகளாக பங்கேற்றனர். இதில் ஏ அணிக்கு குசல் ஜனித் பெரேராவும், பீ அணிக்கு குசல் மெண்டிஸும் தலைவர்களாக செயற்பட்டனர்.
பங்களாதேஷின் பி.கே.எஸ்.பி. மைதானத்தில் நேற்றைய தினம் (21) நடைபெற்ற 40 ஓவர்கள் கொண்ட பயிற்சிப் போட்டியில் 2 ஓட்டங்களால் இறுக்கமான வெற்றியை குசல் மெண்டிஸ் தலைமையிலான அணி பெற்றுக்கொண்டதுடன், வெற்றியின் விளிம்பிலிருந்த குசல் பெரேரா தலைமையிலான அணி தோல்வியடைந்தது.
முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்த குழு பீ அணி நிர்ணயிக்கப்பட்ட 40 ஓவர்களில் 5 விக்கெட்டுக்களை இழந்து 284 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக நிரோஷன் திக்வெல்லவுடன் பெத்தும் நிஸ்ஸங்க களமிறங்கினார். பெத்தும் நிஸ்ஸங்க 2 ஓட்டங்களை மாத்திமே பெற்றுக்கொடுத்து ஏமாற்றினார்.
துடுப்பாட்டத்தில் அணி சார்பாக நிரோஷன் திக்வெல்ல ஆட்டமிழக்காமல் 88 ஓட்டங்களையும், அணித்தலைவர் குசல் மெண்டிஸ் 69 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக்கொடுத்தனர்.
ஏனையோரில் சாமிக்க கருணாரட்ண (35), தனஞ்சய டி சில்வா (25), லக்சான் சந்தகேன் (27), பினுர பெர்னாண்டோ (21 ) பங்களிப்புச் செய்திருந்தனர்.
பதிலுக்குத் துடுப்பெடுத்தாடிய குசல் பெரேரா தலைமையிலான ஏ அணி 37.2 ஓவர்களில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 282 ஓட்டங்களை பெற்று 2 ஓட்டங்களால் தோல்வியைத் தழுவியது.
ஆரம்ப வீரர்களான தனுஷ்க குணதிலக்க (17), குசல் பெரேரா (28) தசுன் ஷானக்க (1) என சொற்ப ஓட்டங்களைப் பெற்று ஆட்டமிழந்தனர்.
இதையடுத்து பின்வரிசை வீரர்களாக களமிறங்கிய அஷேன் பண்டார ( ஆட்டமிழக்காது 80), வனிந்து ஹசரங்க (79), இசுரு உதான (47) சிறப்பாக துடுப்பெடுத்தாடி நம்பிக்கையளித்தனர்.
இருந்தபோதிலும், பீ அணியின் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக பந்துவீசி சகல விக்கெட்டுக்களையும் கைப்பற்றி தங்களது அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
பந்துவீச்சில் சாமிக்க கருணாரட்ண 3 விக்கெட்டுக்களையும், பினுர பெர்னாண்டோ, துஷ்மன்த்த சமீர, ரமேஷ் மெண்டிஸ், லக்சான் சந்தகேன் ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுக்களை கைப்பற்றினர்.
A அணி : குசல் பெரேரா, தனுஷ்க குணதிலக்க, வனிந்து ஹசரங்க, தசுன் சானக்க, அஷேன் பண்டார, இசுரு உதான, அக்கில தனஞ்சய, அசித்த பெர்னாண்டோ, ஷிரான் பெர்னாண்டோ.
B அணி : குசல் மெண்டிஸ், நிரோஷன் திக்வெல்ல, பெத்தும் நிஸ்ஸங்க,தனஞ்சய டி சில்வா, ரமேஷ் மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன, பினுர பெர்னாண்டோ, லக்சான் சந்தகான், துஷ்மன்த்த சமீர.