இன்று முதல் எதிர்வரும் 22 ஆம் திகதி வரை கென்யாவின் தலைநகரம் நைரோபியில் நடைபெறவுள்ள உலக இளையோர் மெய்வல்லுநர் போட்டி இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இன்றைய தினம் நடைபெறவுள்ள போட்டிகளில் இலங்கை 2 போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கிறது.
117 நாடுகள் மற்றும் 2 அணிகளிலிருந்து மொத்தமாக 973 வீர, வீராங்கனைகள் 44 வகையான போட்டிகளில் போட்டியிடுகின்றனர். இதில் இலங்கை சார்பாக 3 வீரர்களும் 4 வீராங்கனைகளுமாக 7 பேர் 5 வகையான போட்டிகளில் பங்கேற்கவுள்ளனர்.
ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டி, பெண்களுக்கான 100 மீற்றர், 200 மீற்றர், 800 மீற்றர் மற்றும் கலப்பு 4 தர 400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டி ஆகிய 5 போட்டி நிகழ்வுகளில் பங்கேற்கின்றது.
20 வயதுக்குட்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கும் இளையோர் இப்போட்டித் தொடரின் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மத்துகம ஆனந்த சாஸ்த்திராலய பாடசாலையின் இசுரு கெளஷல்ய பங்கேற்கவுள்ளார். கொழும்பு லும்பினி வித்தியாலயத்தின் மெதானி ஜயமான்ன பெண்களுக்கான 100 மீற்றர் மற்றும் 200 மீற்றர் ஓட்டப் போட்டிகளிலும் , கம்பஹா திருச்சிலுவை கல்லூரியின் ஷானிக்கா லக்சானி, வலலை ஏ ரத்நாயக்க வித்தியாலயத்தின் தருஷி கருணாரட்ண ஆகிய இருவரும் பெண்களுக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்கேற்கவுள்ளனர்.
ஆண்கள் மற்றும் பெண்கள் பங்கேற்கும் கலப்பு 4 தர 400 மீற்றர் ஓட்டப் போட்டிக்கு இசுரு கெளஷல்ய , குருணாகல் சேர்.ஜோன் கொத்தலாவல கல்லூரியின் சித்தும் ஜயசுந்தர, வேகட மத்திய கல்லூரியின் ரவிந்து டில்ஷான் பண்டார, தருஷி கருணாரட்ண, கம்பஹா திருச்சிலுவை கல்லூரியின் ஷயுரி லக்சிமா ஆகியோர் தகுதி பெற்றுள்ளனர்.
இன்றைய தினம் காலை முதலாவது 9 மணிக்கு ( இலங்கை நேரப்படி முற்பகல் 11.30 மணிக்கு) இடம்பெறவுள்ள கலப்பு 4×400 மீற்றர் அஞ்சல் ஓட்டப் போட்டியில் இலங்கை அணி பங்கேற்கவுள்ளது. இதனை அடுத்து இலங்கை பங்கேற்கும் இரண்டாவது போட்டி நிகழ்வான பெண்களுக்கான 100 மீற்றர் தகுதிகாண் ஓட்டப்போட்டியில் கொழும்பு லும்பினி கல்லூரி மாணவி மெதானி ஜயமான்ன போட்டியிடவுள்ளார். பிற்பகல் 2.10 மணிக்கு இடம்பெறும் ஆண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இசுரு கௌஷல்ய போட்டியிடவுள்ளார்.
_____________________________________________________________________________