நைஜீரியாவில் மக்கள் கூட்டத்துக்குள் கார் புகுந்து விபத்துக்குள்ளானதில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்தோடு இந்த விபத்தை ஏற்படுத்தியவர்களை மீது மக்கள் மேற்கொண்ட தாக்குதலில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நைஜீரியாவின் வடகிழக்கு பகுதியில் உள்ள கோம்பி மாகாணத்தில் சபோன்-லாயி என்ற இடத்தில் செயின்ட் பீட்டர் ஆங்கிலிகன் தேவாலயம் உள்ளது.
கடந்த ஞாயிறு மாலை ஈஸ்டர் பண்டிகை கொண்டாட்டத்தையொட்டி ஏராளமானவர்கள் இங்கு திரண்டிருந்தனர். சிறுவர்கள் உட்பட பலர் தேவாலயத்துக்கு வெளியே கூட்டமாக நின்று கொண்டிருந்தனர்.
இதன்போது, பொலிஸ் அதிகாரி ஒருவரின் கார் திடீரென அவரின் கட்டுப்பாட்டை இழந்து, மக்கள் கூட்டத்துக்குள் புகுந்துள்ளது.
இந்த விபத்தில் சாலையில் நின்றவர்கள் தூக்கி வீசப்பட்டும் கார் சக்கரத்தில் சிக்கியும் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். அத்தோடு 30க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர்.
இதனையடுத்து கடும் கோபமடைந்த மக்கள் காரை ஓட்டி வந்த பொலிஸ் அதிகாரியையும் அவருடன் இருந்த மற்றொரு பொலிஸ் அதிகாரியையும் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து அவர்கள் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.