தெற்கு அரசியல் பரபரப்பாகக் காணப்படும் நிலையில் நேற்றுக் காலை முதல் இரவுவரை முக்கியத்துவம் மிக்க சந்திப்புக்கள் கொழும்பில் நடந்துள்ளன.
கூட்டரசின் அமைச்சரவைக் கூட்டம் முடிந்த பின்னர் சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்களுடன் அரச தலைவர் மைத்திரிபால சிறிசேன கலந்துரையாடியுள்ளார்.
அதன்பின்னர் தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கு ஆதரவு வழங்கிய சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேரும் அரச தலைவரைச் சந்தித்துள்ளனர்.
அதன்பின்னர் இரவு சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவரான மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்றது.
தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்த சுதந்திரக் கட்சி உறுப்பினர் 16 பேரும் அரச தலைவரைச் சந்திப்பதற்கு முன்னர் திலங்க சுமதிபாலவின் இல்லத்தில் கூடிப் பேசியுள்ளனர்.
அதேவேளை ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் சபையும் நேற்றுக் கூடியது. கட்சியின் மறுசீரமைப்புத் தொடர்பாக ஆராய்ந்தது. மே தினக் குழு உட்பட வேறு சில குழுக்களும் கொழும்பில் நேற்றுச் சந்திப்புக்களை நடத்தியுள்ளன.