நாவலப்பிட்டியில் இருந்து நானுஓயா வரை பயணித்த தொடரூந்தொன்றில் மோதி பெண்ணொருவர் படுகாயமடைந்துள்ளார்.
இன்று பிற்பகல் படுகாயமடைந்த குறித்த பெண் டிக்கோயா ஆதார மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஹட்டன் நுவரெலியா பிரதான வீதியின் மல்லிஹப்பு தொடரூந்து கடவையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்த பெண்ணை குறித்த தொடரூந்தில் பயணித்த பாதுகாப்பு அதிகாரியொருவரும் மற்றும் பயணிகள் இணைந்து மருத்துவமனையில் அனுமதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த பெண் தொடரூந்து வரும் நேரத்தை தொடரூந்து கடவை காவலாளரிடம் வினவியுள்ளதாக தெரியவந்துள்ளது.
அதன்படி , குறித்த பெண் தொடரூந்தில் மோதுண்டாரா ? அல்லது தற்கொலைக்கு முயற்சித்தாரா? என்பது தொடர்பில் ஹட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
காயமடைந்த பெண் ஹட்டன் காமினிபுர பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
அவர் மேலதிக சிகிச்சைக்காக நாவலப்பிட்டி ஆதார மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.