முல்தானில் புதன்கிழமை (30) நடைபெற்ற ஆசிய கிண்ண கிரிக்கெட் ஆரம்பப் போட்டியில் அணித் தலைவர் பாபர் அஸாம், இப்திகார் அஹ்மத் ஆகியோர் குவித்த அபார சதங்களின் உதவியுடன் நேபாளத்தை 238 ஓட்டங்களால் பாகிஸ்தான் அமோக வெற்றிகொண்டது.
ஏ குழுவுக்கான இந்த வெற்றியுடன் சுப்பர் 4 சுற்றில் விளையாடுவதற்கான வாய்ப்பை பாகிஸ்தான் அதிகரித்துக்கொண்டது.
அணித் தலைவருக்கே உரிய பாணியில் மிகவும் அபாரமாகத் துடுப்பெடுத்தாடிய பாபர் அஸாம் 132 பந்துகளை எதிர்கொண்டு 14 பவுண்டறிகள், 4 சிக்ஸ்களுடன் 151 ஓட்டங்களை விளாசினார்.
பாபர் அஸாம் பெற்ற 151 ஓட்டங்கள் ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டி ஒன்றில் பெறப்படட தனிநபருக்கான அதிகூடிய எண்ணிக்கையாகும்.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அஸாம் குவித்த 19ஆவது சதம் இதுவாகும்.
110 பந்துகளில் சதத்தைப் பூர்த்தி செய்த பாபர் அஸாம், அதன் பின்னர் இருபது 20 கிரிக்கெட் பாணியில் துடுப்பெடுத்தாடி அடுத்த 51 ஓட்டங்களை 22 பந்துகளில் விளாசி ஆட்டம் இழந்தார். அவரது துடுப்பாட்டத்தில் மூவகை கிரிக்கெட்டுக்குமான ஆற்றல்கள் வெளிப்பட்டது.
அது மட்டுமல்லாமல் இப்திகார் அஹ்மதுடன் 5ஆவது விக்கெட்டில் பாபர் அஸாம் 131 பந்துகளில் 214 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டார்.
இப்திகார் அஹ்மத் தனது பங்குக்கு அதிரடியாகத் துடுப்பெடுத்தாடி 71 பந்துகளில் 11 பவுண்டறிகள், 4 சிக்ஸ்கள் உட்பட ஆட்டம் இழக்காமல் 109 ஓட்டங்களைக் குவித்தார்.
தனது 15ஆவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விளையாடிய இப்திகார் அஹ்மத் குவித்த முதலாவது ஒருநாள் சதம் இதுவாகும்.
ஆசிய கிண்ண கிரிக்கெட்டில் அறிமுகமான நேபாளம், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் பாகிஸ்தானுடன் முதல் தடவையாக விளையாடியது. அந்த முதல் சந்தர்ப்பத்திலேயே போட்டியின் ஆரம்பத்தில் பாகிஸ்தானுக்குசற்று சவால் விடுக்கும் வகையில் நேபாளம் விளையாடியது.
முதல் 10 ஓவர்களில் முதல் 2 விக்கெட்களைக் கைப்பற்றி 44 ஓட்டங்களுக்கு பாகிஸ்தானை நேபாளம் கட்டுப்படுத்தியிருந்தது. இரண்டாவது 10 ஓவர்களில் 47 ஓட்டங்களை மாத்திரம் கொடுத்த நேபாளம், அடுத்து 10 ஓவர்களில் 48 ஓட்டங்களைக் கொடுத்து 2 விக்கெட்களைக் கைப்பற்றியது. இதற்கு அமைய 30 ஓவர்கள் நிறைவில் பாகிஸ்தான் 4 விக்கெட்டுகளை இழந்து 139 ஓட்டங்களை மாத்திரம் பெற்றிருந்தது.
ஆனால், அடுத்த 10 ஓவர்களில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 74 ஓட்டங்களையும் கடைசி 10 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களையும் விளாசிய பாகிஸ்தான், 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 342 ஓட்டங்களைக் குவித்திருந்தது.
பந்துவீச்சில் சோம்பால் காமி 85 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார்.
343 ஓட்டங்கள் என்ற மிகவும் கடினமான எட்ட முடியாத வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 23.4 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 104 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
பாகிஸ்தானின் வேகப்பந்துவீச்சுக்களை எதிர்கொள்வதில் பெரும் சிரமத்தை எதிர்கொண்ட நேபாளம் முதல் 3 விக்கெட்களை 14 ஓட்டங்களுக்கு இழந்து தடுமாறியது.
எனினும் ஆரிப் ஷெய்க் (26), சோம்பால் காமி (28) ஆகிய இருவரும் 4ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு சிறு சோதனையைக் கொடுத்தனர்.
அவர்கள் இருவரைவிட குல்சான் ஜா (13) மாத்திரம் இரட்டை இலக்க எண்ணிக்கையைப் பெற்றார்.
பந்து வீச்சில் ஷதாப் கான் 27 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 16 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஷஹீன் ஷா அப்றிடி 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
இதேவேளை, பி குழுவில் இடம்பெறும் இலங்கையும் பங்களாதேஷும் இரண்டாவது போட்டியில் கண்டி பல்லேகலை சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (31) ஒன்றையொன்று எதிர்த்தாடவுள்ளது.