நேபாளத்தில் நடைபெறவுள்ள எவரெஸ்ட் பிரீமியர் லீக் டி-20 போட்டிகளில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும், துடுப்பாட்ட வீரருமான தினேஷ் சந்திமால் விளையாடவுள்ளார்.
31 வயதான சந்திமால், பைரஹவா கிளாடியேட்டர்ஸ் அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடுவார்.
இந்த தொடர் எதிர்வரும் செப்டம்பர் 25 முதல் ஒக்டோபர் 9 வரை கிரித்பூரில் உள்ள திரிபுவன் பல்கலைக்கழக சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும்.
தொடர் குறித்து தனடு டுவிட்டர் பதிவில் பதிவிட்டுள்ள சந்திமால், நேபாளத்தின் அழகிய நாட்டைப் பார்க்க மிகவும் ஆவளாகவுள்ளேன், கிளாடியேட்டர்களுடன் ஒரு சிறந்த எவரெஸ்ட் பிரீமியர் லீக் பருவத்தில் விளையாட நான் மிகவும் எதிர்பார்த்துள்ளேன் என்று கூறியுள்ளார்.
சந்திமால் 62 டெஸ்ட், 149 ஒருநாள் மற்றும் 57 டி-20 கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி கணிசமான சர்வதேச அனுபவத்தை கொண்டுள்ளார்.
2014 ஆம் ஆண்டில் பங்களாதேஷில் நடந்த டி-20 உலகக் கிண்ணத்தை வென்ற இலங்கை அணியின் ஒரு உறுப்பினராகவும் சந்திமல் இருந்திருக்கிறார்.
2020 லங்கா பிரீமியர் லீக் தொடரில் சந்திமால் எட்டு இன்னிங்ஸ்களிலிருந்து 41 சராசரியாகவும் கிட்டத்தட்ட 130 ஸ்ட்ரைக் ரேட்டில் 246 ஓட்டங்களை எடுத்தார்.
2012 ஆம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் சந்திமலை ராஜஸ்தான் ரோயல்ஸ் வாங்கியது. ஆனால் அவருக்கு ஒரு போட்டியிலாவது விளையாடும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
எவரெஸ்ட் பிரீமியர் டி-20 தொடரில் மற்றொரு இலங்கையரான புபுது தசநாயக்க, கிளாடியேட்டர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக செயற்படுவார்.
தசாநாயக்க 1993 -1994 ஆண்டுகளுக்கு இடையில் இலங்கைக்காக 11 டெஸ்ட் மற்றும் 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியமையும் குறிப்பிடத்தக்கது.
_____________________________________________________________________________